பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் யாசிர் ஷா மீது 14 வயது சிறுமி ஒருவர் அளித்த புகாரின் பேரில் லாகூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் நகர் ஷாலிமார் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள 14 வயது சிறுமி, யாசிர் ஷாவின் நண்பர் ஃபர்ஹான் தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதற்கு யாசிர் ஷா உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் பற்றி வெளியில் தெரிவித்தால் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டியதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்.
ஃபர்ஹானின் தொல்லையால் மனம் உடைந்து போயிருந்த அந்த சிறுமி, யாசிர் ஷாவிடம் உதவி கோரி இருக்கிறார். ஆனால், அதை கண்டுக்கொள்ளாத யாசிர் ஷா, கிண்டல் செய்துவிட்டு அமைதியாக கடந்துவிடுமாறு அந்த சிறுமிக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். மேலும், பாலியல் தொந்தரவு பற்றி வெளியே சொல்லாமல் அமைதியாக இருந்தால் அடுத்த 18 ஆண்டுகளுக்கு தங்குவதற்கான வீடு, பணம் ஆகியவற்றை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். புகாரின்படி, இந்த சம்பவம் 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்திருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக இன்னும் யாரும் கைது செய்யப்படாத நிலையில், யாசிர் ஷா, அவரது நண்பர் ஃபர்ஹான் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் வங்கதேச சென்றிருந்த பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் அணியில் யாசிர் ஷா இடம் பெறவில்லை. காயம் காரணமாக அவர் அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்நிலையில், யாசிர் ஷா மீது வைக்கப்பட்டிருக்கும் புகாருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
35 வயதான சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா, பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில், 235 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 33 போட்டிகளில் 200 விக்கெட்டுகள் கடந்து இந்த சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார். கடைசியாக, இந்த ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தார். மேலும், 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், 24 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
மேலும் படிக்க: வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை: ஐந்தே நாட்களில் தங்க நகைகளை மீட்ட தமிழக காவல்துறை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்