Tamil Nadu Premier League 2023: தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் அணியை கோவை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 


தமிழ்நாடு பிரிமியர் லீக்கின் 16வது லீக் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டி சேலத்தில் உள்ள எஸ்.எஃப்.சி. கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய கோவை அணி சார்பில் களமிறங்கியவர்கள் அனைவரும் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக, திண்டுக்கல் அணியின் பந்து வீச்சை கோவை அணியினர் துவம்சம் செய்தனர். 


கோவை அணி சார்பில், சாய் சுதர்சன் 41 பந்துகளை எதிர்கொண்டு, 8 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 83 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் பேட்டிங் செய்த கோவை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. திண்டுக்கல் அணியின் சார்பில், சரவணகுமார் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 






அதன் பின்னர் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் அணிக்கு, 8 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அதன் பின்னர் திண்டுக்கல் அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தொடக்க ஆட்டக்காரர் சிவம் சிங் மட்டும் 42 பந்தில் 2 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 61 ரன்கள் எடுத்து தன்னால் முடிந்தவரை போராடினார். திண்டுக்கல் அணி சார்பில் சிவம் சிங் 61 ரன்கள், பூபதி குமார் 17 ரன்கள், சரத் குமார் 36 ரன்கள் என மூவர் மட்டும் இரட்டை இலக்க எண்களில் ரன்கள் சேர்த்தனர். மற்றவர்கள் அனைவரும் சிங்கிள் டிஜிட்டில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தனர். 20 ஓவர்வரை தாக்குப்பிடிக்காத திண்டுக்கல் அணி, 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், கோவை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 


கோவை அணி சார்பில், கௌதம் தாமரைக் கண்ணன் 3 விக்கெட்டுகளையும், ஷாருக் கான் மற்றும், மணிமாறான் சித்தார்த் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த போட்டியில், சாய் சுதர்சனுக்கு மேன் ஆஃப் த மேட்ச் விருது கொடுக்கப்பட்டது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், கோவை அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.