2024ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இதுவரை 12 அணிகள் நேரடியாக தகுதிபெற்றுள்ளனர். அதன்படி நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளனர். 

2022 டி20 உலகக் கோப்பை - ஒரு பார்வை:

டி20 உலகக் கோப்பைத் திருவிழா ஆஸ்திரேலிய மண்ணில் வெகுச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் சூப்பர் 12 சுற்று முடிந்த நிலையில், அரையிறுதிக்கான போட்டிகள் வருகின்ற புதன்கிழமை (நவம்பர்.9) முதல் தொடங்குகிறது. சூப்பர் 12 சுற்றுகளின் முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. 

நியூசி-பாக்., இந்தியா - இங்கி., 

முதலாவது அரையிறுதி ஆட்டமான இது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தானும் மோதுகின்றன. குரூப் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3ல் வெற்றியும் 1ல் தோல்வியும் அடைந்தது. குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3இல் வெற்றியும் 2 ஆட்டங்களில் தோல்வியையும் தழுவியது.

இரண்டாவது அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் வியாழக்கிழமை (நவம்பர் 10) மோதுகிறது. இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் டி20 உலகக் கோப்பையை ஒரு முறை வென்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024:

 2022 டி20 உலகக்கோப்பை தொடரை தொடர்ந்து, வருகின்ற 2024ம் ஆண்டு ஜூன் மாதம் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், இந்த தொடரில் தகுதிபெற்றுள்ள அணிகள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

2022 டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளது. அதேபோல், இந்தாண்டு நடைப்பெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன. மேலும், புள்ளிப்பட்டியல் அடிப்படையில், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிபெற்றனர். 

T20 உலகக் கோப்பை 2024: நேரடியாக தகுதி பெற்ற அணிகள்

  • வெஸ்ட் இண்டீஸ்
  • அமெரிக்கா
  • இந்தியா
  • இங்கிலாந்து
  • நியூசிலாந்து
  • பாகிஸ்தான்
  • ஆஸ்திரேலியா
  • தென்னாப்பிரிக்கா
  • இலங்கை
  • நெதர்லாந்து 
  • ஆப்கானிஸ்தான் 
  • வங்காளதேசம்

இதை தவிர அமெரிக்க தகுதி சுற்றில் ஒரு அணி, ஆப்பிரிக்க தகுதி சுற்றில் 2 அணிகள், ஆசிய தகுதி சுற்றில் 2 அணிகள், கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதி சுற்றில் ஒரு அணி, ஐரோப்பிய தகுதி சுற்றில் 2 அணிகள் என மொத்தம் 8 அணிகளும் இதில் பங்கேற்க உள்ளன. இதையடுத்து வருகிற 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கின்றனர்.