டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் பல அதிர்ச்சிகரமான மற்றும் ஆச்சரியமான நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இந்த வகையில் நேற்று உகாண்டா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின.


உகாண்டாவை சிதைத்த வெஸ்ட் இண்டீஸ்:


இந்த போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்லஸ் 44 ரன்களும், பூரன் 22 ரன்களும், கேப்டன் பவெல் 23 ரன்களும், ரூதர்போர்ட் 22 ரன்களும் எடுக்க, கடைசி கட்டத்தில் ரஸல் 30 ரன்கள் விளாசினர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் மொத்தம் 173 ரன்களை 5 விக்கெட்டுகளை இழந்து எடுத்தது,


176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உகாண்டா அணி தங்களது அனுபவமின்மையை அப்படியே காட்டினர். தொடக்கம் முதலே விக்கெட்டுகள் சரிந்து கொண்டே வந்தது. தொடக்க வீரர் முகாசா டக் அவுட்டாக, சேசாஸி 4 ரன்களுக்கு அவுட்டாக, ஒபுயா 6 ரன்களுக்கும், அல்பேஸ் ராம்ஜானி 6 ரன்களுக்கும் அவுட்டாகினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய உகாண்டா அணியை வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் ஹொசைன் சிதைத்தார்.


39 ரன்களுக்கு ஆல் அவுட்:


இதனால், 12 ஓவர்களில் வெறும் 39 ரன்களுக்கு உகாண்டா ஆல் அவுட்டானது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த மோசமான தோல்வி மூலமாக உகாண்டா அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட்டான அணி என்ற மோசமான சாதனையை உகாண்டா படைத்துள்ளது.


இதற்கு முன்பு 2014ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி 39 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே குறைந்த ஸ்கோர் ஆக இருந்தது. தற்போது நெதர்லாந்து அணியுடன் இணைந்து இந்த மோசமான சாதனையை உகாண்டா அணி பகிர்ந்து கொண்டுள்ளது. உகாண்டா அணியைப் பொறுத்தவரையில் டி20 உலகக்கோப்பைத் தகுதிச்சுற்றில் வியக்கத்தக்க வெற்றிகளைப் பெற்று உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றனர்.


மோசமான சாதனை:


உகாண்டா, நெதர்லாந்து அணிக்கு அடுத்தபடியாக நெதர்லாந்து அணி 44 ரன்கள், வெஸ்ட் இண்டீஸ் அணி 55 ரன்கள், உகாண்டா 58 ரன்கள் என்று குறைந்தபட்ச ஸ்கோர்களை உலகக்கோப்பை டி20யில் பதிவு செய்துள்ளது. உகாண்டா அணி நடப்பு உலகக்கோப்பைத் தொடரிலே 2 குறைந்தபட்ச ஸ்கோர்களை உகாண்டா அணி படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் உகாண்டா அணி ஏற்கனவே பப்புவா நியூ கினியாவுடனான போட்டியில் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: T20 World Cup Super 8: இந்தியா - பாகிஸ்தான் மோதல்..தோல்வியடைந்தால் பாகிஸ்தானின் நிலைமை என்னவாகும்? விவரம் உள்ளே!


மேலும் படிக்க: T20 WC IND vs PAK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நேருக்கு நேர் மோதும் இந்தியா - பாகிஸ்தான்! வெற்றி யாருக்கு?