உலககோப்பை சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உலககோப்பை தொடரின் 32வது ஆட்டத்தில் குரூப் 1 பிரிவில் ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்திய நேரப்படி, இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறுகிறது.
குரூப் 1 பிரிவில் 5வது இடத்தில் உள்ள இலங்கைக்கும், 6வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கும் இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டி ஆகும். அரையிறுதி வாய்ப்பு இரு அணிகளுக்கும் ஏற்கனவே மங்கிய நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம்.
உலககோப்பை டி20 தொடரில் இரு அணிகளும் மோதுவது இதுவே முதன்முறை ஆகும். இரு அணிகளும் மிகவும் பலம் வாய்ந்த அணி என்பதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் மும்முரம் காட்டுவார்கள். இதனால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
இலங்கை அணியினர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். நிசங்கா, மெண்டிஸ், அசலங்கா, டி சில்வா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். கேப்டன் சனகா, பனுகா தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை காட்ட வேண்டும்.
ஆப்கானிஸ்தான் அணியிலும் நஜிபுல்லா ஜட்ரான், குர்பாஸ், ஷாசாய், ஜட்ரான் அதிரடி காட்டுவார்கள் என நம்பலாம். பந்துவீச்சில் பரூக்கி,முஜீப் உர் ரஹ்மான் அசத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். கேப்டன் முகமது நபி, ரஷீத்கான் ஆல் ரவுண்டர்களாக ஜொலிக்க வேண்டியது அவசியம்.
இலங்கை அணியிலும் மதுஷன், பெர்னாண்டோ, லஹிரு குமாரா பந்துவீச்சிலும், ஹசரங்கா ஆல்ரவுண்டராகவும் ஜொலிக்க வேண்டியது அவசியம் ஆகும். இரு அணிகளும் இதற்கு முன்பு 3 போட்டியில் ஆடி ஆப்கானிஸ்தான் ஒரு முறையும், இலங்கை 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
குரூப் 1 பிரிவில் இலங்கை அணி 3 போட்டிகளில் ஆடி 1 வெற்றி 2 தோல்வியுடன் 2 புள்ளிகளுடனும், ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளில் ஆடி 1 தோல்வியுடன் வெற்றியின்றி 2 புள்ளிகளுடன் உள்ளது.