டி20 உலகக்கோப்பைக்காக ஒவ்வொரு அணிகளும் தயாராகி வருகிறது. ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணிக்கான வீரர்களை அறிவித்து வரும் சூழலில், இன்று இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், விராட் கோலி, ஜெய்ஸ்வால், ரிஷப்பண்ட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங், ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, சாஹல், அக்‌ஷர் படேல் மற்றும் முகமது சிராஜ்.  இவர்கள் தவிர, மாற்று வீரர்களாக சுப்மன்கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் இடம்பிடித்துள்ளனர். 


தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு மறுப்பு:


இந்திய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங், பவுலிங் என அனுபவமும், இளமையும் கலந்த கலவையாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வின், தினேஷ் கார்த்திக், ஷாரூக்கான், சாய் சுதர்சன், நடராஜன், சாய் கிஷோர் என தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பாக ஆடியும் இவர்களில் ஒருவருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் வேதனையை உண்டாக்கியுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரையில் பல ஜாம்பவான்கள் இருந்தாலும், தென்னிந்தியாவைச் சேர்ந்த வீரர்களுக்கு பெரியளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக வரலாறு கிடையாது. ஸ்ரீகாந்த், ராகுல் டிராவிட், கும்ப்ளே, அஸ்வின், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் என தென்னிந்தியாவில் சில ஜாம்பவான் வீரர்கள் மட்டுமே பெரியளவில் இந்திய அணியில் இடம்பிடித்து புகழ்பெற்றவர்கள்.


தொடரும் புறக்கணிப்பு:


இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் என்று எடுத்துக் கொண்டால் வெகுசிலர் மட்டுமே உள்ளனர். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்திற்கு பிறகு அஸ்வின் மட்டுமே நீண்ட காலம் இந்திய அணிக்காக ஆடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர். தினேஷ் கார்த்திக் சில போட்டிகளில் ஆடினாலும் தொடர்ச்சியான வாய்ப்பு என்பது அவருக்கு மறுக்கப்பட்டது.


சமீபகாலமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நடப்பு ஐ.பி.எல். தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன், நடராஜன், தினேஷ் கார்த்திக் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகின்றனர். இவர்களில் ஒருவருக்கு கூட இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த டி20 உலகக்கோப்பைக்கே தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த ஐ.பி.எல். தொடரில் அவர் சிறப்பாக ஆடினாலும் வயது காரணமாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.


இனியாவது வாய்ப்பு கிட்டுமா?


அதேசமயம் சன்ரைசர்ஸ் அணிக்காக பந்துவீச்சில் அசத்தி வரும் நடராஜனும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். குஜராத் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் சாய் சுதர்சனும் இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை. இவர்கள் மட்டுமின்றி இறுதிக்கட்டத்தில் அதிரடியில் அசத்தக்கூடிய ஷாரூக்கான் பெயரும் பரீசிலிக்கப்படவில்லை. சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான அஸ்வினும் இந்த டி20 உலகக்கோப்பையில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.


இளமையும், அனுபவமும் உள்ள தமிழ்நாட்டின் வீரர்கள் ஒருவரைக் கூட பி.சி.சி.ஐ. அணியில் சேர்க்கவில்லை. உலகக்கோப்பைத் தொடருக்கு பிறகு இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.