டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் யார் யார் இருக்க போகிறார்கள் என்பதே மிகப்பெரிய சஸ்பென்ஸாக உள்ளது. பெரும்பாலும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என நம்பப்படுகிறது. அதே நேரத்தில், இந்திய அணி அறிவிப்புக்கு முன்னதாக, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு புதுடெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மூவருக்கு இடையேயான சந்திப்பு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்ததாக கூறப்படுகிறது. டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்க மே 1ம் தேதி கடைசி நாள் என்பதால் இன்னும் 24 மணி நேரத்திற்குள் இந்திய அணி வீரர்களின் பெயர்களை அறிவிக்கலாம் என தெரிகிறது. 


இந்தநிலையில், தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கலாமா..? வேண்டாமா..? என்று இணையத்தில் ஏபிபி நாடு கருத்து கேட்பு நடத்தியது. அதன் முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது. 


கருத்துக்கணிப்பில் என்ன முன்வைக்கப்பட்டது..? 


ஏபிபி நாடு சார்பில் டி20 உலகக் கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு இடம் இருக்கிறதா என்பதை கேள்வியாக முன்வைத்தோம். அதனை தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா - தேவை, ஹர்திக் பாண்டியா  - தேவையில்லை, ஆல்ரவுண்டர் என்பதால் வேறு வழியில்லை - தேவை என்று மூன்று ஆஃப்சன்களை கொடுத்திருந்தோம். 




அதில், ஹர்திக் பாண்டியா - தேவை என்று 26 சதவீதம் பேரும், ஹர்திக் பாண்டியா - தேவையில்லை என்று 59 சதவீதம் பேரும், ஆல்ரவுண்டர் என்பதால் வேறு வழியில்லை - தேவை என்று 16 சதவீதம் பேரும் வாக்களித்திருந்தனர். 


யார் துணை கேப்டன்..? 


வருகின்ற டி20 உலகக் கோப்பை 2024ல் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருப்பார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால, துணை கேப்டனாக யார் அறிவிக்கப்படுவார்கள் என்ற கேள்வி நம் அனைவரது மனதிலும் எழுந்தது. இதையடுத்து, ஒன்று ஹர்திக் பாண்டியா, அப்படி இல்லையென்றால் ரிஷப் பண்ட்டுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 


இதையடுத்து, பார்ம் இல்லாத காரணத்தினால் ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் எடுக்கப்படவில்லை என்றால், ரிஷப் பண்ட்-க்கு துணை கேப்டன் பதவி வழங்கலாம். 


அப்போ! சஞ்சு, கே.எல். ராகுல் நிலைமை..?


ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, சஞ்சு சாம்சன் மற்றும் கே.எல்.ராகுல் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் இடம்பெற மாட்டார்கள் என தெரிகிறது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் முதல் தேர்வாக இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே கே.எல். ராகுல் மற்றும் சஞ்சு சாம்சனை விட ரிஷப் பண்ட்-க்கு முன்னுரிமை பெறலாம். இது தவிர பல முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.


அதன்படி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வரும் ஷிவம் துபேயை இந்திய அணியில் சேர்க்க படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர, சுப்மன் கில், ரியான் பராக், அக்ஷர் படேல் மற்றும் கலீல் அகமது ஆகியோர் இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.