டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரகள் ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். 


முதல் ஓவரில் 12 ரன்கள் அடித்தனர். அதன்பின்னர் இரண்டாவது ஓவரை ஹசரங்கா வீசினார். அதன் இரண்டாவது பந்தில் ஜேசன் ராய் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் 5ஆவது ஓவரில் டேவிட் மலானும் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அதற்கு அடுத்த ஓவரில் ஹசரங்கா பந்துவீச்சில் பெர்ஸ்டோவ் முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனால் இங்கிலாந்து அணி 6 ஓவர்களின் முடிவில் 36 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்தது. 




இதைத் தொடர்ந்து ஜோஸ் பட்லர் மற்றும் இயான் மோர்கன் ஜோடி சேர்ந்து இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறிது நேரம் நிதானமாக ஆடிய பட்லர் பின்னர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்த் அணி 15 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் இங்கிலாந்து அணி மேலும் 50 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


 


அப்போது ஆட்டத்தின் 19ஆவது ஓவரில் கேப்டன் மோர்கன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தன்னுடைய அதிரடி தொடர்ந்து காட்டிய பட்லர் 101* ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் விளாசினார். அத்துடன் கடைசி பந்தில் சிக்சர் விளாசி தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். 45 ஆவது பந்தில் அரைசதம் கடந்த பட்லர் 67ஆவது பந்தில் சதம் கடந்து அசத்தினார். அத்துடன் தன்னுடைய முதல் டி20 சதத்தை டி20 உலகக் கோப்பையில் பட்லர் பதிவு செய்து அசத்தினார். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்டும், சமீரா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 


 






ஜோஸ் பட்லரின் இந்த பொறுப்பான இன்னிங்ஸை பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி வருகின்றனர். 


மேலும் படிக்க: ஆறுதல் என்றாலும்... ஒரு கை ஓசை... பூம் பூம் பூம்ரா ரெக்கார்டு என்ன? ஆராயும் ABP நாடு!