டி20 சூப்பர்-8ல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தங்களின் கடைசி ஆட்டத்தில் விளையாட உள்ளன. இந்தப் போட்டி இன்று செயின்ட் லூசியாவில் அமைந்துள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணி தற்போது 4 புள்ளிகளையும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 2 புள்ளிகளையும் பெற்றுள்ளன.


இன்றைய வானிலை அறிக்கையின்படி பார்த்தால் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால், ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லும் பாதை மிகவும் கடினமாக மாறும். அதேநேரத்தில், ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைவதற்கான கதவுகள் திறக்கப்படும். எனவே இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி ரத்து செய்யப்பட்டதால் எப்படி ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குள் நுழையும் என்பதை இங்கே பார்க்கலாம்.


அரையிறுதிக்கு செல்லுமா ஆப்கானிஸ்தான்..? 


குரூப் 1ல் உள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது 4 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் முறையே தலா 2 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. இந்த அணிகளை தவிர, வங்கதேசம் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து நான்காவது இடத்தில் உள்ளது.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியானது இன்று மழையால் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கும். அப்படிப்பட்ட நிலையில் இந்தியா 5 புள்ளிகளையும், ஆஸ்திரேலியா 3 புள்ளிகளையும் பெறும். ஆப்கானிஸ்தானின் நிகர ரன்-ரேட் ஆஸ்திரேலியாவை விட மிகவும் குறைவாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குள் செல்ல நிகர ரன்-ரேட்டை சார்ந்து இருக்க வேண்டியதில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றியை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி, அடுத்ததாக வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும்.


இதுவே, இன்றைய போட்டி ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தினால், ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்வது மிகவும் கடினமாக இருக்கும்.  


அரையிறுதிக்கு செல்லுமா இந்திய அணி:


2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா இதுவரை லீக் போட்டிகள் முதல் சூப்பர் 8 சுற்று வரை எந்த போட்டியிலும் தோற்காமல் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும். அதேநேரத்தில்,  போட்டி மழையால் கைவிடப்பட்டால், அதுவும் இந்தியாவுக்கு நல்லதுதான். ஏனெனில் அது மூலமாகவும் 1 புள்ளி பெற்று அரையிறுதிக்குள் நுழையும். மறுபுறம், இந்த போட்டி ரத்து செய்யப்பட்டவுடன் ஷாண்டோ தலைமையிலான வங்கதேச அணி 2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும். 


ஆஸ்திரேலியாவுக்கு வில்லனாகுமா மழை..? 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இன்றைய சூப்பர் 8 போட்டியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி செயின்ட் லூசியாவில் நடைபெற உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆட்டம் மழையில் கைவிடப்பட்டால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புகள் குறைவு. அதேநேரத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்து புதிய வரலாறு படைக்கலாம்.