ஐபிஎல் 2024 போட்டிகளுக்கு முன்பு வரை, 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி விளையாடுவாரா என்ற கேள்வி வலம் வந்தது. அதன்பிறகு, ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அதிக ரன்கள் எடுத்தவருக்கான ஆரஞ்சு கோப்பையை வென்று, உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்தார். 


ஐபிஎல் 2024 சீசனை போன்று 2024 டி20 உலகக் கோப்பையிலும் கெத்து காட்டுவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட கோலி, அரையிறுதி போட்டி வரை சொற்ப ரன்களில் மட்டுமே அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதுகுறித்து, ரோஹித் சர்மாவிடம் கேட்டபோது கூட, விராட் கோலி ஒரு கிளாஸ் பெயர். அவர் இறுதிப்போட்டிக்காக கூட தனது ஆட்டத்திறனை சேமித்து வைத்திருக்கலாம் என தெரிவித்தார். 


அதற்கு ஏற்றாற்போல் விராட் கோலியும் நேற்றைய தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 76 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல உதவினார். 


ரோஹித் சர்மாவும் 2024 டி20 உலகக் கோப்பையில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி, எதிரணி வீரர்களை திணற வைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சூப்பர் 8ல் 92 ரன்களும், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 57 ரன்களும் எடுத்து அசத்தினார். 


மேலும், டி20  உலகக் கோப்பை  மட்டுமின்றி சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி அதிக ரன்கள் எடுத்துள்ளனர். அதன்படி, ரோஹித் சர்மா 4231 ரன்கள் எடுத்து சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 4188 ரன்களுடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 


இப்படியான ஜாம்பவான்கள் நேற்று டி20 உலகக் கோப்பையில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள். கடந்த 2022 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பெரிதாக இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பையில் விளையாடவில்லை. இந்தநிலையில், ரோஹித், கோலி ஓய்வுக்கு பிறகு இந்திய டி20 அணியில் இவர்கள் இடத்தை யார் பிடிக்க போகிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.. 


தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக தொடக்க வீரர்களாக யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கலாம். தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் இஷான் கிஷன், ரிங்கு சிங், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவலாம். 


இவர்களில் எத்தனை பேர் இருந்தாலும், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது ஆட்டத்திறன் மற்றும் அனுபவத்தை மற்ற வீரர்களால் நிரப்ப முடியாது. 


விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை: 


டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாகவே இருந்தது. விராட் கோலி 14 ஆண்டுகளாக இந்திய அணிக்காக டி20 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி அறமுகமானார். இதற்குப் பிறகு, கோலி இந்தியாவுக்காக மொத்தம் 125 போட்டிகளில் களமிறங்கி 137.04 ஸ்ட்ரைக் ரேட்டில் 4188 ரன்கள் எடுத்தார். இதில், 38 அரைசதம் மற்றும் 1 சதத்தையும் அடித்தார்.


ரோஹித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை: 


2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் எம்எஸ் தோனியின் தலைமையின் கீழ் ரோஹித் சர்மா அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக 159 போட்டிகளில் விளையாடி 4231 ரன்கள் எடுத்துள்ளார்.  இதில், 32 அரைசதங்களும், 5 சதங்களும் அடங்கும். இதுவரை இந்திய அணிக்காக 62 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்த ரோஹித், 50 வெற்றிகளையும், 12 தோல்விகளையும் பெற்று கொடுத்துள்ளார்.