டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 59 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உதவியுடன் 76 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பல சாதனைகளை படைத்துள்ளார். 


அப்படி என்ன சாதனை படைத்தார் விராட் கோலி..? 


டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் எடுத்த 2வது அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இதுவாகும். இந்த பட்டியலில் முதலிடத்திலும் விராட் கோலியே உள்ளார். கடந்த 2014ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக விராட் கோலி 77  ரன்கள் எடுத்திருந்தார். தற்போது நேற்று நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 76 ரன்கள் எடுத்திருந்தார். மூன்றாவது இடத்தில் கவுதம் கம்பீர் இடம்பெற்றுள்ளார். கடந்த 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக கவுதம் கம்பீர் 75 ரன்கள் எடுத்திருந்தார். 






டி20 போட்டிகளில் அதிக அரைசதம்: 


இதுவரை விராட் கோலி டி20 போட்டிகளில் 39வது அரைசதம் அடித்துள்ளார். அதே நேரத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டி20 போட்டிகளில் 39 அரைசதம் அடித்துள்ளார். இதன்மூலம், டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் பட்டியலில் பாபர் அசாமுடன் இணைந்து விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். 


இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டிக்கு முன்னதாக, ஐசிசி இறுதிப் போட்டியில் விராட் கோலியின் சாதனையைப் பார்ப்போம்.



  • இந்தியா vs இலங்கை, ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி (2011): 35 ரன்கள்

  • இந்தியா vs இங்கிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி இறுதி (2013): 43 ரன்கள்

  • இந்தியா vs இலங்கை, டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி (2014): 77 ரன்கள்

  • இந்தியா vs பாகிஸ்தான் , சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி (2017): 5 ரன்கள்

  • இந்தியா vs நியூசிலாந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி (2021): 44 மற்றும் 13 ரன்கள்

  • இந்தியா vs ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி (2023): 14 மற்றும் 49 ரன்கள்

  • இந்தியா vs ஆஸ்திரேலியா , ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி (2023): 54 ரன்கள்


விராட் கோலியின் டி20 சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை: 


டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாகவே இருந்தது. விராட் கோலி 14 ஆண்டுகளாக இந்திய அணிக்காக டி20 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி அறமுகமானார். இதற்குப் பிறகு, கோலி இந்தியாவுக்காக மொத்தம் 125 போட்டிகளில் களமிறங்கி 137.04 ஸ்ட்ரைக் ரேட்டில் 4188 ரன்கள் எடுத்தார். இதில், 38 அரைசதம் மற்றும் 1 சதத்தையும் அடித்தார்.


டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் செயல்திறன்: 


டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியின் ஆட்டமானது எப்போதும் ஒரு மைல்கல்தான். டி20 உலகக் கோப்பையில், விராட் கோலி இந்தியாவுக்காக 35 போட்டிகளில் 58.72 சராசரியுடன் 128.81 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 1292 ரன்கள் எடுத்தார். இதில், 15 அரைசதங்களும் அடங்கும்.