2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்றுகொடுத்து, டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா. 


ரோஹித் சர்மா ஓய்வுபெற்ற கையோடு, இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி அடுத்தடுத்து எழ தொடங்கிவிட்டது. இதையடுத்து, இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக, இந்த 4 வீரர்களில் யாரேனும் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவர்கள் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.. 


ஹர்திக் பாண்டியா: 


ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக டி20 போட்டியில் அடுத்த இந்திய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், இந்திய அணியின் ஆல்ரவுண்டராக உள்ள ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக கடந்த சில தொடர்களில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். மேலும், இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமானவர்களில் ஹர்திக் பாண்டியாவும் ஒருவர். 


ஜஸ்பிரித் பும்ரா: 


இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. களத்தில் மிக சாந்தமாக காணப்பட்டாலும், அவரது பந்துவீச்சு முறை கண்டு எதிரணி பேட்ஸ்மேன்கள் அலறுவர். இப்படியான திறமைகொண்ட பும்ரா, இதற்கு முன்னதாக, அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்தி தொடரையும் வென்று கொடுத்தார். இதுபோக, இந்திய டெஸ்ட் அணிக்கு ஒரு சில போட்டிகளில் துணை கேப்டனாகவும் இருந்துள்ளார்.


சூர்யகுமார் யாதவ்: 


இந்த பட்டியலில் உள்ள மற்றொரு பெயர் சூர்யகுமார் யாதவ். கடந்த 2021ம் ஆண்டே இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் அறிமுகமாகி இருந்தாலும், டி20யில் இவரது செய்த அளக்க முடியாதது. கடந்த 2 ஆண்டுக்கு மேலாக ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்து அசத்தினார். மேலும், 2023ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு, தொடரையும் வென்று கொடுத்தார். இதுபோக, ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஓரிரு போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். 


ரிஷப் பண்ட்: 


ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமாகவே பார்க்கப்படுகிறது. பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் செல்லப்பிள்ளையாகவும் இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவுக்கு முன்னதாக, டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஐபிஎல்லில் கேப்டனாக இருந்த அனுபவனும் ரிஷப் பண்டுக்கு உள்ளது.