T20 World Cup Super 8 Scenario: 2024  டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் 8 சுற்றுக்கு எந்த அணி தகுதிபெறும் என்பது சுவாரஸ்யமாகி வருகிறது. நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள இப்போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அதன்படி அனைத்து பிரிவுகளிலும் முதல்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8க்கு முன்னேறும். தற்போது வரை, இங்கிலாந்து, இலங்கை போன்ற பெரிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியே செல்லும் அபாயத்தில் இருப்பதாகத் தெரிகிறது. அதே சமயம், பாகிஸ்தான் அணி சூப்பர்-8க்கு முன்னேறுவது இந்திய அணியையே அதிகம் சார்ந்துள்ளது. எனவே அனைத்து பிரிவுகளிலும் எந்த அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறும், வெளியேறும் என்பதை இங்கே பார்க்கலாம்..


குரூப்-ஏ 


ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப்-ஏ பிரிவில் தற்போது இந்தியாவும் அமெரிக்காவும் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தகுதிபெறுமா என்பதுதான் சுவாரஸ்யம். இன்று நடைபெறும் இந்தியா-அமெரிக்கா இடையேயான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் பாகிஸ்தானுக்கு சூப்பர்-8க்கான பாதையை எளிதாக வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறுவது கட்டாயம். மேலும், அமெரிக்கா அடுத்ததாக அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள போட்டியிலும் தோல்வியடைய வேண்டும். இப்படி நடந்தால், பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். 


குரூப்-பி


குரூப்-பியில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, நமீபியா, இங்கிலாந்து மற்றும் ஓமன் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகளில் ஆஸ்திரேலியா தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர்-8க்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில், நமீபியா மற்றும் ஓமன் அணிகள் 2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளன. இப்போது இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து இடையே போர் தொடர்கிறது. ஸ்காட்லாந்து 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றுள்ளது, மேலும் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக ஸ்காட்லாந்து அணி 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.


ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் 1ல் தோல்வியடைந்து 1 போட்டியானது மழையால் ரத்தானது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 1 புள்ளியை மட்டுமே பெற்றுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி வெளியேறும் வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. 


குரூப்-சி


ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா, பப்புவா நியூ கினியா மற்றும் நியூசிலாந்து அணிகள் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்த குழுவில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில், அந்த குழுவின் மிகப்பெரிய அணியான நியூசிலாந்து வெளியேறும் அபாயத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா 2 போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற்றன. நியூசிலாந்து ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தாலும், அதிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி தகுதி பெற இன்னும் மூன்று போட்டிகள் உள்ளன. 


குரூப் - டி


டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம் மற்றும் இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. இதுவரை மார்க்கரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா சூப்பர்-8க்கு தகுதி பெற்றுள்ளது. மறுபுறம், இலங்கை வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இலங்கை இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2ல் தோல்வியடைந்து எஞ்சிய ஒரு போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இலங்கை அணிக்கு 1 புள்ளி மட்டுமே உள்ளது. அதேவேளையில் இரண்டாவது இடத்துக்கு வங்கதேசம், நேபாளம், நெதர்லாந்து இடையே கடும் போட்டி நிலவுகிறது.