டி20 உலகக் கோப்பை 2024 தொடங்கியது முதலே பிரச்சனைக்கு மேல் பிரச்சனையாக இருந்து வருகிறது. அதிலும், குறிப்பாக நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை பற்றிதான் அதிக புகார்கள்.
இந்த ஸ்டேடியத்தில் விளையாடும் எந்த அணியாலும் பிட்சை கணிக்க முடியவில்லை. மிகவும் ஸ்லோவாகவும், அதிக பவுன்ஸ் கொண்ட பிட்சாக இருக்கிறது. இதன் காரணமாக, விளையாடும் வீரர்களுக்கு அடிப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது. மேலும், நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் அவுட் பீல்ட் மிக மோசமாக இருந்ததாக ஐசிசியிடம் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும், பயிற்சியாளர்கள் புகார் அளித்ததாக செய்திகள் வெளிவந்தது.
இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணி மேலும் ஒரு அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் உள்ள ஜிம்மில் போதிய வசதி மற்றும் அதிக கூட்டத்தின் காரணமாக, புதிய ஜிம்மை தேடியதாக ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் லாங் ஐலேண்டில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் உள்ள ஜிம்மொன்றில் இந்திய கிரிக்கெட் அணியினர் உடற்பயிற்சி செய்ய ஏற்பாடு செய்து கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், “ இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி ஏற்பாடு செய்து கொடுத்த ஜிம்மை பயன்படுத்தவில்லை. ஐலேண்டில் உள்ள ஹோட்டலில் இந்திய அணி ஜிம்மிற்கு சென்றபோது, அங்கு கூட்ட நெரிசல் காரணமாக வீரர்கள் அனைவரும் தங்களது ஜிம் அமர்வை ரத்து செய்தனர். எனவே ஹோட்டலுக்கு வெளியே உள்ள ஜிம்மில் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
முன்னதாக, இந்திய அணி நியூயார்க்கில் இறங்கியபோது முறையாக பயிற்சி செய்ய இடம் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தது. பூங்கா போன்ற இடத்தில் பயிற்சி மேற்கொள்ள இடம் அளித்ததாகவும், அதன் காரணமாக சரிவர பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இந்திய அணி தவித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.
அனைத்தும் அணிகளுக்கும் பிரச்சனை:
முதன்முறையாக இவ்வளவு பெரிய உலகக் கோப்பை போன்ற நிகழ்வு நியூயார்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 5 மாதத்தில் அவசர அவசரமாக புதிய ஸ்டேடியமும் தயார் செய்யப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து 20 அணிகள் தற்போது நியூயார்க்கில் உள்ளன. இருப்பினும், எந்த அணியும் தற்போது திருப்தியாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக, நியூயார்க் ஸ்டேடியத்தில் இருந்து வெகு தொலைவில் தங்களை தங்க வைக்கப்பட்டதாக இலங்கை அணி புகார் அளித்திருந்தது. அதேசமயம், பாகிஸ்தானும் தங்கள் ஹோட்டலை மாற்றிதர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைத்து அணிகளும் ஐசிசி செய்து கொடுத்த ஏற்பாடு குறித்து அடுத்தடுத்து கேள்விகள் எழுப்பி வருகின்றன. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்தவொரு கிரிக்கெட் வாரியம் புகார் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.