இந்தியா - இங்கிலாந்து:
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் இன்று (ஜூன் 27) நடைபெற்ற அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. கயானாவில் உள்ள ப்ரோவிடென்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் மழை வந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
போட்டி தொடங்குவதாக இருந்த நேரத்தை தாண்டி சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது. அதன்படி டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த வகையில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி களம் இறங்கினார்கள்.
இதில் விராட் கோலி 9 பந்துகள் களத்தில் நின்று 9 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார். பின்னர் வந்த ரிஷப் பண்டும் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்ததாக வந்த சூர்யகுமார் யாதவ் ரோஹித் ஷர்மா உடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். இவர்களது பார்டன்ஷிப் மூலம் இந்திய அணிக்கு வேகமாக ரன்கள் கிடைத்தது.
அரைசதம் விளாசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா:
இதனிடைய தன்னுடைய அரைசதத்தை பதிவு செய்தார் ரோஹித் ஷர்மா. இந்திய அணி 113 ரன்கள் எடுத்த போது ரோஹித் ஷர்மா விக்கெட்டானார். அதன்படி 39 பந்துகள் களத்தில் நின்ற அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 57 ரன்களை குவித்தார். இதனிடையே சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 47 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டிய 23 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களும் எடுக்க ஷிவம் துபே டக் அவுட் ஆகி வெளியேறினார். அக்ஸர் படேல் 10 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா:
பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது இங்கிலாந்து அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தொடங்கினார்கள். இதில் ஜோஸ் பட்லர் 23 ரன்களில் அக்ஸர் படேல் பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து பிலிப் சால்ட் பும்ரா வீசிய பந்தில் அவுட் ஆனார். பின்னர் வந்த ஜானி பயர்ஸ்டவ் அக்ஸர் படேல் பந்தில் விக்கெட்டை இழக்க 35 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி.
அடுத்து வந்த மொயின் அலி மற்றும் சாம் கரணும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க 49 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. ஓரளவிற்கு இங்கிலாந்து அணிக்கு ரன்களை சேர்த்து கொண்டிருந்த ஹாரி ப்ரூக் 25 ரன்களில் விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினார். இவ்வாறாக அனைத்து விக்கெட்டுகளையும் 16. 3 ஒவர்களில் இழந்தது இங்கிலாந்து அணி.
இதன் மூலம் இங்கிலாந்து அணியை 68 ரன்கல் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை அதிகபட்சமாக அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஜூன் 29 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது இந்திய அணி.