நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 சீசன் முடிந்த கையுடன் இந்திய வீரர்கள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் களமிறங்கவுள்ளனர். இந்த டி20 உலகக் கோப்பையில் எந்தெந்த வீரர்கள் களமிறக்கலாம் என்று பிசிசிஐ தேர்வுக்குழு தற்போது மண்டை பிய்த்துகொண்டு இருக்கும். 


இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த சந்திப்பில் வீரர்கள் தேர்வு குறித்து தீவிர விவாதம் நடந்தது. பிசிசிஐ கூட்டத்தில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்தின்போது, ரோஹித்துடன் இணைந்து விராட் கோலி ஓப்பனிங் செய்யலாம் என பேசப்பட்டதாக கூறப்படுகிறது. 


என்ன பேசப்பட்டது..? 


கடந்த வாரம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமையகத்தில் ராகுல் டிராவிட், அகர்கர் மற்றும் ரோஹித் சர்மா இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. இதில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுடன் கோலிக்கு ஓப்பன் செய்ய வாய்ப்பு வழங்கலாம் என்று பேசப்பட்டது. அப்படி, ரோஹித் சர்மாவுடன் கோலி ஓபனிங் செய்தால், ய்ஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இடம் கேள்விகுறியாகிவிடும். அதே நேரத்தில், சுப்மன் கில் ஒரு மாற்று தொடக்க வீரராக இந்திய அணியில் இடம் பெறலாம். 


ஐபிஎல் 2024ல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 121 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 


ரியான் பராக் - மயங்க் யாதவிற்கு இடமா..? 


இந்த பிசிசிஐ கூட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் ரியான் பராக் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2024ல் இருவரும் சிறப்பாகவே செயல்பட்டனர். 






ரியான் பராக் இதுவரை இந்த சீசனில் 7 போட்டிகளில் 318 ரன்களை எடுத்துள்ளார். மயங்க் யாதவ் தனது வேகத்தால் அனைவரது மனதையும் கவர்ந்தார். இந்தநிலையில், மயங்க் யாதவ் காயத்தால் ஒரு சில போட்டிகளை தவறவிட்டுள்ளதால், அவரது நிலைமை என்னவென்று தெரியவில்லை. 


தொடர்ந்து திணறும் ஹர்திக் பாண்டியா: 


மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மோசமான ஆட்டத்தால் தொடர்ந்து திணறி வருகிறார். அவர் மீதும் தேர்வுக்குழு ஒரு கண் வைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 2 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த ஹர்திக், பந்துவீசி 43 ரன்களை விட்டுகொடுத்தார். அதேபோல், ஆர்சிபிக்கு எதிராக 21 ரன்களும், ஹைதராபாத் அணிக்கு எதிராக 24 ரன்களும் மட்டுமே எடுத்தார். 


மேலும், ஹைதராபாத் அணிக்கு எதிராக பந்துவீசிய ஹர்திக் பாண்டியா, 46 ரன்களை விட்டுகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இதுபோல் ஹர்திக் பாண்டியா செயல்பட்டால், வருகின்ற டி20 உலகக் கோப்பையில் இடம் பெறுவது கடினம்.