IPL 2024 KKR vs RR: ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்த அணிகளில்,  முதல் இரண்டு இடங்களையும் ராஜஸ்தான் அணியே பெற்றுள்ளது.


பிரமாண்ட இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் அணி:


ஐபிஎல் தொடர் என்றாலே பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன் குவிப்பது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இந்த வருடம் அதிரடியான பேட்டிங் என்பது சற்று அதிகமாகவே காணப்படுகிறது. 200 ரன்கள் என்பது சர்வ சாதாரணமாக உள்ளது. நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி நிர்ணயித்த 224 ரன்கள் என்ற இலக்கை, ராஜஸ்தான் அணி வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளது. அதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி என்ற சாதனையை ராஜஸ்தான் அணி மீண்டும் நிகழ்த்தியுள்ளது. அதோடு, ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்த அணிகளின் பட்டியலில், முதல் இரண்டு இடங்களையும் ராஜஸ்தான் அணியே பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த 2022ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும், ராஜஸ்தான் அணி 224 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டிப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


ஐபிஎல் தொடரில் அதிகப்படியான சேஸிங்:



  • ராஜஸ்தான் Vs பஞ்சாப் - 224 ரன்கள், 2020

  • ராஜஸ்தான் Vs கொல்கத்தா - 224 ரன்கள், 2024

  • மும்பை Vs சென்னை, 219 ரன்கள், 2019

  • ராஜஸ்தான் Vs டெக்கான் சார்ஜர்ஸ், 215 ரன்கள், 2008

  • மும்பை Vs பஞ்சாப், 214 ரன்கள், 2023


கொல்கத்தாவை வெளுத்து வாங்கிய பட்லர்:


ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி சார்பில், சுனில் நரைன் அதிரடியாக விளையாடி 109 ரன்களை குவித்தார். அவருக்கு உறுதுணையாக ரகுவன்ஷி 30 ரன்களும், ரிங்கு சிங் 20 ரன்களும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த 8 ஓவர்களிலேயே அந்த அணி 100 ரன்களை எட்டியது. ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியவே ராஜஸ்தான் அணி தடுமாறியது. ஆனாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஜோஸ் பட்லர், கடைசி 5 ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடினார். இதன் மூலம் அவர் சதம் விளாசியதுடன், 20வது ஓவரின் கடைசிப் பந்தில் ராஜஸ்தான் அணியை வெற்றி பெறவும் செய்தார்.


ஜோஸ் பட்லரும் - வெற்றி சதங்களும்:


நடப்பு ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லர் இதுவரை இரண்டு சதங்களை விளாசியுள்ளார். இரண்டுமே சேஸிங்கில் அமைந்ததோடு, அணியின் வெற்றிக்கும் உதவியுள்ளது. அதோடு, பெங்களூர் - ராஜஸ்தான் போட்டியில் முதலில் கோலி சதம் விளாசினார். சேஸிங்கில் கடைசி பந்தில் சதம் விளாசிய பட்லர், ராஜஸ்தானை வெற்றி பெறச் செய்தார். நேற்றைய போட்டியிலும் நரைன் சதமடித்து இருந்தாலும், பட்லர் சதமடித்து தனது அணிக்கு வெற்றியை பரிசளித்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில், கோலியை தொடர்ந்து பட்லர் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். கெயில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.