ஐபிஎல் 2024ன் இறுதிப் போட்டி வருகின்ற மே 26ம் தேதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் (சேப்பாக்கம்) இறுதிப்போட்டியில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎல் 2024 சீசனுக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2024 டி20 உலகக் கோப்பையை நோக்கி நகர்வார்கள்.


இந்த உலகக் கோப்பை போட்டியானது எப்போது தொடங்கும் என இந்திய அணி ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப் போட்டியில் விளையாட பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அமெரிக்கா சென்று பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய அணியை சேர்ந்த எந்த வீரரும் இதுவரை அமெரிக்கா சென்றடையவில்லை.  இந்த நிலையில், தற்போது இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்காக அமெரிக்கா செல்லும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய அணி எப்போது அமெரிக்கா செல்கிறது? 


ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முதல் பேட்ச் வருகின்ற மே 25ம் தேதி அதாவது நாளை அமெரிக்கா கிளம்புகிறது. இந்த குழுவில் ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் விளையாடாத வீரர்கள் அனைவரும் அமெரிக்கா புறப்படுகின்றன. மீதமுள்ள வீரர்கள் மே 26ம் தேதி நடைபெறும் ஐபிஎல் 2024ன் இறுதிப் போட்டியில் விளையாடிய பிறகு அமெரிக்கா கிளம்புகிறார்கள். 


இதுகுறித்து பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து ஒருவர் தெரிவித்ததாவது, “ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் போன்ற வீரர்கள் மே 25ம் தேதி துணை ஊழியர்களுடன் ஒன்றாக நியூயார்க்கிற்கு புறப்படுகிறோம்." என தெரிவித்துள்ளார். 


கடந்த 11 ஆண்டுகளாக இந்திய அணியின் கோப்பை கனவு: 


கடைசியாக 2013-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை எம்.எஸ். தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. அதன்பிறகு, அந்த அணி 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கும், 2015 மற்றும் 2019ம் ஆண்டு அரையிறுதி வரை சென்று தோல்வியடைந்து வெளியேறியது. இதுபோக 2021 மற்றும் 2023ல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிகளிலும், 2014ல் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியையும், 2016 மற்றும் 2022ல் டி20 அரையிறுதி வரை சென்று வெளியேறியது. கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணி சிறப்பாக செயல்பட்ட போதிலும், எந்த பட்டத்தையும் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.


டி20 உலகக் கோப்பை 2024ன் முதல் போட்டி ஜூன் 2-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்குகிறது. இந்தியாவின் முதல் ஆட்டம் நியூயார்க்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துக்கு எதிராக தொடங்குகிறது. இதன்பிறகு ஜூன் 9ஆம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளுக்கு முன்னதாக, இந்திய அணி ஜூன் 1ம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. 


டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்:


ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திரா சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. சிராஜ்


ரிசர்வ் வீரர்கள்: சுப்மான் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான்.