ஐபிஎல் 2024 ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் சென்னை சூப்பட் கிங்ஸ் அணி ஐபிஎல் 2024 சீசனில் இருந்து வெளியேறியது. 


தோனியின் முயற்சி வீண்: 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ரன்கள் எடுத்திருந்தாலும் தோல்வியை சந்திருக்கும். ஆனால், ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கும். கடைசி ஓவரில் மகேந்திர சிங் தோனி, யாஷ் தயாள் வீசிய முதல் பந்தை 101 மீட்டர் தூரம் சிக்ஸர் அடித்து அசத்தினார். ஆனால், அடுத்த பந்திலேயே தோனி அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்த பந்துகளில் எதிர்பார்த்த அளவிற்கு ரன்கள் கிடைக்காததால் சென்னை சூப்பர் கிங்ஸின் பிளே ஆஃப் சுற்றுக்கான நம்பிக்கை முடிவுக்கு வந்தது. 






இப்போட்டியின் முடிவுக்கு பிறகு மகேந்திர சிங் ஓய்வு குறித்த விவாதம் சூடு பிடிக்க தொடங்கியது. ரசிகர்களும் தங்களது எக்ஸ் பக்கத்தில் #ThanksThala என்ற ஹேஸ்டாக்கில் தோனிக்கு நன்றி தெரிவித்தனர். இதையடுத்து, மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சீசன் மகேந்திர சிங் தோனியின் கடைசி சீசனா அல்லது அடுத்த சீசனிலும் தோனி சென்னை அணிக்காக தனது திறமையை வெளிப்படுத்துவாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் சுற்றி வந்தது. 


புதிய அணியை தொடங்குகிறாரா எம்.எஸ்.தோனி..? 


தோனி ஓய்வு பெறுவது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இதற்கிடையில் மகேந்திர சிங் தோனி சமூக வலைதளங்களில் மூன்று வரி பதிவை எழுதி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தோனி தனது பேஸ்புக் பக்கத்தில், “ இது பறக்க வேண்டிய நேரம். முக்கியமானதை செய்ய வேண்டிய நேரம் இது. நான் எனது சொந்த அணியை தொடங்குகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இத்துடன் கோப்பை ஒன்றின் எமோஜியும் அதில் இணைக்கப்பட்டு இருந்தது. 



இதனால், எம்.எஸ். தோனி ஐபிஎல்லில் புதிய அணியை வாங்க போகிறாரா..? சென்னை அணியில் இருந்து விலகி புதிய அணியில் இணைய போகிறாரா..? என்ற கேள்விகள் எழுந்தது.  ஆனால், இது எதுவும் உண்மையாக இருக்காது. ஏனேனில், இதற்கு முன்பாகவும், தோனி இதேபோல் தனது பேஸ்புக்கில் பல பதிவுகளை வெளியிட்டு இருந்தார். இது அனைத்தும் தான் நடிக்கும் விளம்பரம் தொடர்பான பதிவாகவே இருந்தது. அதேபோல், தற்போதைய பதிவும் விளம்பரத்திற்காகவே இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


தோனியையும் நம்ப முடியாது..? 


தோனி என்ன, எப்போது செய்வார் என்பது யாருக்கும் தெரியாது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அல்லது டெஸ்ட் கேப்டன் பதவியை துறப்பது என சமீப காலத்தில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் தோனி. அதுமட்டுமின்றி, சென்னை கேப்டன் பதவியில் இருந்து விலகி அதிர்ச்சியை கொடுத்தார் இந்த ஐபிஎல் சீசனுக்கு முன்பாக.. எனவே தோனி என்ன முடிவு எடுப்பார் என்று சொல்வது கடினம்.