ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா முடிந்த கையோடு டி20 உலகக் கோப்பையானது வருகின்ற ஜூன் 2ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டியானது இந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய அணி அமெரிக்கா செல்லும் அட்டவணையில் ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. 


மே 25ம் தேதி அமெரிக்கா செல்லும் இந்திய வீரர்கள்: 


இந்திய வீரர்களின் முதல் பேட்ச் நாளை அதாவது மே 21ம் தேதி அன்று புறப்படும் என்று சமீபத்தில் செய்திகள் வந்தன. ஆனால் இப்போது அட்டவணையில் மாற்றம் குறித்த செய்தி ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில்,  ஐபிஎல் 2024 இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள் வருகின்ற மே 25ஆம் தேதி முதல் அணியும், மீதமுள்ள வீரர்கள் மே 27ஆம் தேதியும் நியூயார்க்கிற்குச் செல்வார்கள் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


மஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன் ரோஹித் சர்மா...


இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளர்கள் வருகின்ற மே 25-ம் தேதி புறப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாகியுள்ள மற்ற வீரர்கள் அனைவரும் வருகின்ற மே 27ம் தேதி அமெரிக்கா புறப்படுகின்றனர்.


டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வங்கதேச அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த இந்தியா - வங்கதேசம் இடையிலான பயிற்சி ஆட்டம் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, ஜூன் 5 ஆம் தேதி அயர்லாந்திற்கு எதிராக இந்திய அணி தனது டி20 உலகக் கோப்பைக்கான முதல் போட்டியில் விளையாடுகிறது. பின்னர் ஜூன் 9 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.


மீதமுள்ள போட்டிகளின் விவரம்..


அயர்லாந்து, பாகிஸ்தானுக்குப் பிறகு இந்திய அணி, வருகின்ற ஜூன் 15ம் தேதி கனடாவுக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்திய அணியின் முதல் மூன்று போட்டிகள் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.


சமீபத்தில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என்றும்,  அதேசமயம் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது. 


டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:


ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சிங், யுஸ்வேந்திர சிங். சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ்


ரிசர்வ் வீரர்கள்:


சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் அவேஷ் கான்.