இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிட்னியில் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க சிட்னி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


கைது:


உலக கோப்பை டி20 கிரிக்கெட் விளையாடுவதற்காக, இலங்கை அணி ஆஸ்திரேலியா சென்றது. அப்போது இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் வன்கொடுமை வழக்கில் சிட்னியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். சிட்னியில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி தனது கடைசி குரூப் ஆட்டத்தில் விளையாடிய போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதையடுத்து, நேற்று காலை அவர் இல்லாமல் இலங்கை அணி ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இலங்கை திரும்பியது.


டி20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வான குணதிலக, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அஷேன் பண்டார சேர்க்கப்பட்டார். இருப்பினும், அணி நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பாமல் அணியுடன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.






தொடர் சர்ச்சை:


இதேபோல், கடந்த 2018-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்டில் முறைகேடு செய்ததற்காக குணதிலகவை இடைநீக்கம் செய்தபோது இதேபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குணதிலக சிக்கிக் கொண்டார். இலங்கையில் நோர்வே பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். 


இருப்பினும், இந்த வழக்கில் குணதிலகவின் தலையீடு இல்லை என்று இவரை போலீசார் விடுவித்து, அவரது நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 



ஜாமீன் மறுப்பு:


இதேபோல், கடந்த 2021 ம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கை அணி வீரர்களான குசல் மெண்டிஸ், தொடக்க பேட்ஸ்மேன் தனுஷ்க குணதிலக மற்றும் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியபோது ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக எச்சரிக்க பட்டனர். அதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை வீரர் குணதிலகவுக்கு, ஜாமீன் வழங்க சிட்னி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.