Nicholas Pooran Most sixes For West Indies In T20Is: டி20 உலகக் கோப்பை 2024 இன் 40 வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி 2024 டி20 உலகக் கோப்பையில் கடைசி லீக்போட்டி ஆகும். இந்த போட்டிக்கு பிறகு, 2024 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுகள் நாளை முதல் தொடங்குகிறது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 53 பந்துகளில் 6 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உதவியுடன் 98 ரன்கள் எடுத்திருந்தார். இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் 114 ரன்களில் அனைத்து விக்கெட்களை இழந்து ஆட்டமிழந்தது. 

இதன்மூலம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயிலை பின்னுக்கு தள்ளி தனது பெயரில் சிறப்பான சாதனையை படைத்துள்ள நிக்கோலஸ் பூரனும் புது சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை நிக்கோலஸ் பூரன் பெற்றுள்ளார். முன்னதாக கிறிஸ் கெய்ல் இந்த சாதனையில் முதலிடத்தில் இருந்தார். பூரன் இதுவரை 92 டி20 சர்வதேச போட்டிகளில் மொத்தம் 128 சிக்சர்களை அடித்துள்ளார். கிறிஸ் கெய்ல் 79 டி20 போட்டிகளில் 124 சிக்சர்களை அடித்து தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார். எவின் லூயிஸ் 53 டி20 போட்டிகளில் 111 சிக்சர்களை அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த டி20யில் ஜாம்பவானாக பார்க்கப்படும் கீரன் பொல்லார்ட் பொல்லார்ட் 101 டி20 போட்டிகளில் 99 சிக்சர்களை அடித்து நான்காவது இடத்தில் உள்ளார். இதற்குப் பிறகு, தற்போதைய டி20 வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மேன் பவல் இதுவரை 75 டி20 போட்டிகளில் விளையாடி 90 சிக்சர்களை அடித்து ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 500+ சிக்ஸர்களை அடித்த வீரர்: 

சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு லீக் டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 500+ சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற பெருமையை நிக்கோலஸ் பூரன் இன்று படைத்துள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 1056 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதைத் தொடர்ந்து, கீரன் பொல்லார்ட் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆண்ட்ரே ரசல் மூன்றாவது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் கொலின் முன்ரோ இப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஐந்தாவது இடத்திலும், நிக்கோலஸ் பூரன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

நாடு வீரர்கள் சிக்ஸர்களின் எண்ணிக்கை
வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெய்ல் 1056
வெஸ்ட் இண்டீஸ் கீரன் பொல்லார்ட் 860
வெஸ்ட் இண்டீஸ் ஆண்ட்ரே ரஸல் 686
நியூசிலாந்து கொலின் மன்ரோ 548
இந்தியா ரோஹித் சர்மா 514
வெஸ்ட் இண்டீஸ் நிக்கோலஸ் பூரான் 502