Trent Boult: நியூசிலாந்து அணியின் முதன்மையான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான டிரெண்ட் போல்டை, சக வீரர்கள் உணர்ச்சிப்பூர்வமாக வழியனுப்பி வைத்தனர்.


டிரெண்ட் போல்ட் ஓய்வு:


பிரபல வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட், ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 போட்டியுடன், நியூசிலாந்து அணிக்காக டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில், நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாததால், நேற்றைய பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டி அவருக்கு கடைசி போட்டியாக அமைந்தது. 


டி20 உலகக் கோப்பைகளில் இதுவரை 17 போட்டிகளில் விளையாடி 6.04 என்ற எகானமி ரேட்டில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில், போல்ட் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வா?


சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து டிரென்ட் போல்ட் விலகினார். இதனால், தொடர்ச்சியாக இல்லாமல் குறிப்பிட்ட போட்டிகளில் மட்டுமே போல்ட் விளையாடி வருகிறார். இந்நிலையில் நடப்பாண்டு டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்றுள்ளார். அதன்படி கவனித்தால் இனி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் அவர் பங்கேற்கமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. காரணம் அடுத்த டி20 உலகக் கோப்பை 2026ம் ஆண்டும், அடுத்த ஒருநாள் உலகக் கோப்பை 2027ம் ஆண்டும் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இதுதொடர்பான விளக்கத்தை போல்ட்டால் மட்டுமே வழங்க முடியும்.


தடம்பதித்த போல்ட்: 


2011ம் ஆண்டு நியூசிலாந்து அணியில் அறிமுகமானதில் இருந்து, அந்த அணிய்ன் வெற்றிகரமான சகாப்தத்தின் ஒரு அடித்தளமாக போல்ட் இருந்து வருகிறார்.  மூன்று வடிவங்களிலும் ஐசிசி போட்டிகளின் பல இறுதிப் போட்டிகளில் அணி இடம்பெற முக்கிய பங்காற்றினார். கூடுதலாக, இடது கை வேகப்பந்து வீச்சாளர் 2014 முதல் நான்கு டி20 உலகக் கோப்பைகளில் பங்கேற்றுள்ளார்.


2022 ஆம் ஆண்டு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து விலகிய அவரது முடிவு,  நியூசிலாந்துடனான போல்ட்டின் எதிர்காலத்தை நிச்சயமற்றதாகவே மாற்றியுள்ளது.  இதனிடையே,  உலகளவில் T20 ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டை விளையாடுவதில் போல்ட் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






வழியனுப்பிய கேன் வில்லியம்சன்:


போல்ட்டின் ஓய்வு குறித்து பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், “அவர் எங்கள் விளையாட்டின் அற்புதமான பணியாளராக இருந்தார். நாங்கள் 10, 11 வயதிற்குட்பட்ட கிரிக்கெட்டில் இருந்து ஒன்றாக விளையாடி வளர்ந்தோம். இன்றளவும் அவர் சிறப்பாகவும், நலல் உடல் தகுதியுடனும் பந்துவீசி வருவது விளையாட்டின் மீது அவர் கொண்டுள்ள ஆர்வத்திற்கு ஒரு சான்றாகும். அவர் ஓய்வு பெறுவதன் மூலம் ஒரு புதிய வீரருக்கு வாய்ப்பளிப்பதை காணும்போது பெருமையாக உள்ளது” என தெரிவித்தார்.