AFG vs NZ: நியூசிலாந்தை ஓடவிட்ட ஆப்கானிஸ்தான்.. டி20 உலகக் கோப்பையில் கலக்கும் கத்துக்குட்டி அணிகள்..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Continues below advertisement

டி20 உலகக் கோப்பையின் 14வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதியது. கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது.

Continues below advertisement

ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ், அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் எடுத்தார். குர்பாஸைத் தவிர, சத்ரன் அணிக்காக சிறப்பாக விளையாடி 41 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் போல்ட் மற்றும் ஹென்றி அதிகபட்சமாக தலா 2  விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தநிலையில், 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் 75 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களை இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸ்: 

160 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே மிகவும் மோசமாக அமைந்தது. அந்த அணியின் முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலனை லீல் பவுல்டு செய்து கோல்டன் டக் செய்து பெவிலியனுக்கு அனுப்பினார் ஃபசல்ஹக் ஃபரூக்கி. பின்னர் மூன்றாவது ஓவரின் நான்காவது பந்தில் டெவோன் கான்வேயின் இரண்டாவது விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து அணி. கான்வே 10 பந்துகளில் 1 பவுண்டரி உதவியுடன் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதன்பின், 5வது ஓவரின் இரண்டாவது பந்தில் டேரில் மிட்செலின் விக்கெட்களை வீழ்த்தினார் ஃபசல்ஹக் ஃபரூக்கி. மிட்செல் 5 பந்துகளில் 1 பவுண்டரி உதவியுடன் 5 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 

பின்னர் அந்த அணி 7வது ஓவரின் முதல் பந்தில் 9 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் கேன் வில்லியம்சன் விக்கெட்டை நியூசிலாந்து இழக்க, 9வது ஓவரின் முதல் பந்தில் மார்க் சாம்ப்மேன் (04) அவுட்டானார். பின்னர் அடுத்த பந்தில் மைக்கேல் பிரேஸ்வெல் ரன் எதுவும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினார். 

தொடர்ந்து, 10வது ஓவரின் நான்காவது பந்தில் 18 பந்துகளில் 2 பவுண்டரிகள் உதவியுடன் 18 ரன்கள் எடுத்திருந்த கிளென் பிலிப்ஸ் ஆட்டமிழந்தார். பிலிப்ஸையே நியூசிலாந்து அணி முழுமையாக நம்பியிருந்தது. இதனை தொடர்ந்து, அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆல் ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முகமது நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் அந்த அணியின் ஒன்பதாவது விக்கெட்டை 13வது ஓவரின் கடைசி பந்தில் லோக்கி பெர்குசனும், பத்தாவது விக்கெட்டை 16வது ஓவரின் இரண்டாவது பந்தில் மேட் ஹென்றியும் ஆட்டமிழந்தனர். பெர்குசன் 2 ரன்களும் (5 பந்துகள்), ஹென்றி 17 பந்துகளில் 1 சிக்ஸர் உதவியுடன் 12 ரன்களும் எடுத்திருந்தனர். 

கேப்டன் ரஷித் கான், ஃபசல் ஹக் ஃபரூக்கி மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோர் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர். ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரஷித் கானும், ஃபசல் ஹக் ஃபரூக்கியும் தலா 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். 

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த குர்பாஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கலக்கும் கத்துக்குட்டி அணிகள்: 

முன்னதாக, 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை அமெரிக்காவும், அயர்லாந்து அணியை கனடாவும் வீழ்த்தியிருந்தனர். இந்த நிலையில், தற்போது நியூசிலாந்து போன்ற உலக தரம் வாய்ந்த அணியை ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பது ஆச்சர்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால், 2024 டி20 உலகக் கோப்பையில் வளர்ந்து வரும் அணிகள் கலக்கி வருகின்றன. 

Continues below advertisement