2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையானது கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. உதாரணத்திற்கு நேற்று முன்தினம் அமெரிக்க அணி பாகிஸ்தானை வீழ்த்தி கெத்துக்காட்டியது. இப்படி நாளுக்குநாள் டி20 உலகக் கோப்பை சுவாரஸ்யங்களை கூட்டிக்கொண்டே செல்கிறது.
இந்தநிலையில், கடந்த 5ம் தேதி இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது. இதில், இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக வருகின்ற ஜூன் 9ம் தேதி (நாளை) பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. டி20 உலகக் கோப்பை வரலாற்றியில் இரு அணிகளும் நேருக்குநேர் மோதுவது இது 8வது முறையாகும். முந்தையை 7 போட்டிகளில் பாகிஸ்தானை விட இந்திய அணியே வெற்றி கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதிகபட்சமாக இந்திய அணி 6 முறையும், பாகிஸ்தான் ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. முதல் டி20 உலகக் கோப்பையான 2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு முறை நேருக்குநேர் மோதியது. இதில், இந்தியாவே இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்தநிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் டி20 உலகக் கோப்பை போட்டியில் மோதிய வரலாற்று குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
2007 டி20 உலகக் கோப்பை:
2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இரண்டு முறை மோதின. டி20 உலகக் கோப்பையின் குரூப் ஸ்டேஜ் போட்டியில் 14 செப்டம்பர் 2007 அன்று முதல் முறையாக இரு அணிகளும் விளையாடியது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் போட்டியை டிரா செய்ய, பௌல் அவுட் முறையில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக அதே ஆண்டு செப்டம்பர் 24 அன்று நடந்த இறுதிப் போட்டியில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் ஆனது.
2012 டி20 உலகக் கோப்பை:
இலங்கையில் நடைபெற்ற இப்போட்டியில், சூப்பர்-8 போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில், பாகிஸ்தான் அணி 128 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை துரத்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிகபட்சமாக இந்திய அணி சார்பில் விராட் கோலி 78 ரன்களும், லட்சுமிபதி பாலாஜி 3 விக்கெட்டுகளும் எடுத்திருந்தனர்.
2014 டி20 உலகக் கோப்பை:
வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு 130 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதை இந்தியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றிகரமாக துரத்தியது. டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற நான்காவது வெற்றி இதுவாகும்.
2016 டி20 உலகக் கோப்பை:
இந்தியாவில் நடைபெற்ற 2016 டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நேருக்கு நேர் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் அணியால் இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியவில்லை. இதன் காரணமாக, இந்தியாவுக்கு 118 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி நிர்ணயித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி 55 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி வெற்றியை தேடி தந்தார்.
2021 டி20 உலகக் கோப்பை:
2021ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஐந்து முறை தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் வரலாற்றை மாற்றியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 157 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை துரத்தி அசத்தியது. இதையடுத்து, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது.
2022 டி20 உலகக் கோப்பை:
2022 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில், 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட மோசமான தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. அக்டோபர் 23ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 159 ரன்கள் எடுத்தது. விராட் கோலி மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.