டி20 உலகக் கோப்பை 2024:



டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன் 9) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன.


டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள் மைக்கேல் லெவிட் மற்றும் மேக்ஸ் வோட்வுட். இதில் மூன்று பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற மைக்கேல் லெவிட் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதேபோல், 6 பந்துகள் களத்தில் நின்ற மேக்ஸ் வுட் 2 ரன்களில் நடையைக்கட்டினார். பின்னர் களம் இறங்கிய விக்ரம் ஜித் சிங் மற்றும் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் ஜோடி சிறப்பாக விளையாடி நெதர்லாந்து அணிக்கு ரன்களை சேர்த்துக்கொடுத்தனர்.


இதனிடையே விக்ரம்ஜித் சிங் 17 பந்துகள் களத்தில் நின்று 12 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த பாஸ் டி லீடே 6 ரன்களில் நடையைக்கட்ட அடுத்தாக வந்த நெதர்லாந்து அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான எட்வர்ட்ஸ் 9 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து மார்க்ரமிடம் ரன் அவுட் ஆனார். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.


பின்னர் வந்த தேஜா நிடமானுரு ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற அடுத்தாக களம் இறங்கிய வான் பீக்  சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் உடன் ஜோடி அமைத்தார். இதனிடையே   அதிரடியாக விளையாடி வந்த  சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்40 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு நெதர்லாந்து அணி 103 ரன்கள் எடுத்தது.


தென்னாப்பிரிக்காவை மிரட்டிய நெதர்லாந்து:


இதனைத்தொடர்ந்து 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியை நெதர்லாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் மிரட்டினார்கள். அதாவது தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய குயிண்டன் டி காக் டக் அவுட் ஆனார். மறுபுறம் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் 10 பந்துகள் களத்தில் நின்று 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


பின்னர் வந்த அந்த அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் 3 பந்துகள் களத்தில் நின்று ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இப்படி 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது தென்னாப்பிரிக்க அணி.


முன்னதாக இந்த டி20  உலகக் கோப்பை போட்டியில் நேபாள அணியை நெதர்லாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது இச்சூழலில் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி 3 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய நெதர்லாந்து அணியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.