இம்ரான் கானை விடுதலை செய் என்ற வாசகத்துடன் விமானம் ஒன்று இந்தியா பாகிஸ்தான் விளையாடி வரும் மைதானத்திற்கு மேல் பறந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான்:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் இந்த போட்டிகள் விறுவிறுப்பை எட்டியிருக்கிறது. அந்தவகையில் இன்று (ஜூன் 9) நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 19 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
வானில் பறந்த வாசகம்:
இந்நிலையில் தான் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மேல், 'இம்ரான் கானை விடுதலை செய்’ என்ற வாசகத்துடன் விமனம் ஒன்று பறந்துள்ளது. இது தொடர்பான வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிறையில் இருக்கும் இம்ரான் கான்:
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட்டு முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் நான்கு வெவ்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ளார். அவர் மேல்முறையீடு செய்ததை அடுத்து இரண்டு வழக்குகளில் இருந்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில் தான் தற்போது இம்ரான் கானை விடுதலை செய் என்ற வாசகத்துடன் விமானம் ஒன்று இந்தியா பாகிஸ்தான் விளையாடி வரும் மைதானத்திற்கு மேல் பறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக விளையாட்டு போட்டிகளின் போது மைதானத்திற்கு மேல் ட்ரோன், விமானம் உள்ளிட்டவை பறக்க தடை இருக்கும் சூழலில் திடீரென எப்படி போட்டி நடைபெறும் போது இந்த விமானம் மைதானத்திற்கு மேல் எப்படி பறந்தது என்பது ரசிகர்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவிற்கு பல்வேறு விதமான கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். சிலர் இம்ரான் கானுக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். அதேநேரம் ரசிகர்களில் சிலர் இது பாதுகாப்பு குறைபாடு என்று கூறிவருகின்றனர்.
மேலும் படிக்க: Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி இருந்தது?- கட் ஆஃப் குறையுமா? தேர்வர்கள் என்ன சொல்கிறார்கள்?
மேலும் படிக்க: T20 WC West Indies: கோப்பையை ஜெயித்தால்தான் எங்களுக்கு இது கிடைக்கும்.. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மேன் பவல்!