டி20 உலகக் கோப்பை 2024 போட்டியானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா மண்ணில் நடைபெற்று வருகிறது. இன்று நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகிறது. அதே நேரத்தில், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் வந்துள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
யார் யார் வந்துள்ளனர்..?
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில், சிக்ஸர் கிங் யுவராஜ் சிங், கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர், பாகிஸ்தான் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடி ஆகியோர் போட்டியை காண நேரில் வந்துள்ளனர்.
முன்னதாக, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், கிறிஸ் கெயிலை சந்தித்து அவரது வெள்ளை நிற கோர்ட்டில் தனது ஆட்டோகிராஃப் இட்டார். தொடர்ந்து, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியிடமும் ஆட்டோகிராஃப்களை வாங்கி கொண்டார்.
மேலும், 'யுனிவர்ஸ் பாஸ்' கிறிஸ் கெயில் ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆட்டோகிராஃப்களை வாங்கி கொண்டார். இந்நிலையில் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தவிர, சமூக ஊடக பயனர்கள் தொடர்ந்து கருத்துகள் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பையில் பிராண்ட் அம்பாசிடராக கிறிஸ் கெயில்:
2024 டி20 உலகக் கோப்பையின் பிராண்ட் அம்பாசிடராக கிறிஸ் கெய்ல் நியமிக்கப்பட்டுள்ளார். 'யுனிவர்ஸ் பாஸ்' கிறிஸ் கெய்ல் தவிர யுவராஜ் சிங் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோர் பிராண்ட் அம்பாசிடர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2024 டி20 உலகக் கோப்பையானது கடந்த ஜூன் 2ம் தேதி முதல் தொடங்கியது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி பிரமாண்டமாக தனது டி20 உலகக் கோப்பை பயணத்தை தொடங்கியது. அதே சமயம், பாகிஸ்தான் அணி, அமெரிக்காவுடன் தோல்வியுற்று கட்டாய வெற்றிக்காக இந்தியாவுக்கு எதிராக களமிறங்கியுள்ளது. குரூப் ஏ பிரிவில், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. 2024 டி20 உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதேசமயம் 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஜூன் 29ஆம் தேதி நடைபெற உள்ளது.