வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு வெற்றி என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பது தொடர்பாக அந்த அணியின் கேப்டன் ரோவ்மேன் பவுல் பேசியுள்ளார்.


டி20 உலகக் கோப்பை 2024:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது ஐசிசி டி20 உலகக் கோப்பை. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் சி யில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், உகண்டா, பப்புவா நியூ கினியா  மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.


அந்தவகையில் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி முதல் இடத்தில் இருக்கிறது.  


அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியும் தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதே போன்று விளையாடினால் அந்த அணிகள் நிச்சயம் சூப்பர் 8 சுற்றுக்களுக்கு முன்னேற முடியும்.


முன்னதாக கடந்த 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் தகுதி பெற கூட முடியவில்லை. சாம்பியன் பட்டத்தை இரண்டு முறை வென்ற ஒரு அணியால் ஒரு நாள் உலகக் கோப்பையில் விளையாட முடியவில்லை என்ற என்ற வேதனை அந்த நாட்டு வீரர்களுக்கு இருந்து வந்தது.


வெற்றி தான் முக்கியம்:


இச்சூழலில் தான் தங்கள் நாட்டுக்கு வெற்றி என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பது தொடர்பாக அந்த அணியின் கேப்டன் ரோவ்மேன் பவல் பேசியுள்ளார்.  அதில், “கேப்டனாக என்னுடைய வாழ்க்கையை நான் எட்டு அல்லது ஒன்பது வயதிலேயே தொடங்கி விட்டேன்.


அப்போதே எனக்கு தெரியும் நாங்கள் அதிகமான தொடர்களை வெல்லவில்லை என்பதை உணர்ந்தேன். எனவே வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நான் பொறுப்பேற்ற உடன் எடுத்துக்கொண்ட முதல் உறுதி தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான். ஏனென்றால் நாங்கள் தொடரை வென்றால்தான் அதாவது வெற்றி பெற்றால்தான் ஐசிசி அட்டவணையில் எங்களது தரவரிசை சிறப்பான ஒன்றாக மாறும்.” என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், வெற்றி என்பது எங்கள் அணிக்கு எவ்வளவு முக்கியமானது என்றால் நாங்கள் வெற்றி பெற்றால் தான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு நிறைய ஸ்பான்சர்களை பெற முடியும். வெற்றியாளர்களுக்குத்தான் அதிகமான ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.


எனது தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. நாங்கள் எப்போதும் எங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். மூன்றாவது முறையாக நாங்கள் சாம்பியன் பட்டத்தை வெல்வோம்” என்று கூறினார் ரோவ்மேன் பவல்