டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். தொடர் முடிந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை டி20 உலகக்கோப்பை பக்கம் திரும்பியுள்ளது. கடந்த 2ம் தேதி தொடங்கிய உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியா - அயர்லாந்து இன்று மோதல்:
இதில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இந்திய அணிக்கான போட்டி இன்று தொடங்குகிறது. டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி இன்று அயர்லாந்துடன் மோதுகிறது. ஐ.பி.எல். தொடர் மீண்டும் இந்திய அணிக்காக நீல சீருடையில் களமிறங்கியுள்ள இந்திய வீரர்கள் வெற்றியுடன் இந்த தொடரை தொடங்குவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் பலமாக உள்ளனர்.
ஆடும் அணியில் சாம்சன் மற்றும் ஷிவம் துபே இருவருக்கும் வாய்ப்பு கிடைத்தால் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அக்ஷர் படேல் ஆல்ரவுண்டர்களாக உள்ளனர்.
ப்ளேயிங் லெவனில் ரோகித்துக்கு சவால்:
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப்சிங் வேகத்தில் அசத்துவார்கள் என்று கருதப்படுகிறது. சுழலில் சாஹல், அக்ஷர், குல்தீப்பில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. ப்ளேயிங் லெவனை தேர்வு செய்வதில் ரோகித் சர்மாவுக்கு சவால் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயர்லாந்து அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் ஸ்டிர்லிங் தலைமையில் களமிறங்குகிறது. டக்கர், பால்ப்ரைன், ஹாரி டெக்டர், கேம்பர் அந்த அணிக்கு பேட்டிங்கில் பலமாக உள்ளனர். டாக்ரெல், டெலனி, அடெய்ர், மெக்கெரத்தி, ஜோசுவா லிட்டில் பந்துவீச்சில் அசத்துவார்கள் என்று கருதப்படுகிறது.
இதுவரை எப்படி?
அயர்லாந்து அணியை காட்டிலும் இந்திய அணி பலமான அணியாக இருந்தாலும், டி20 போட்டியைப் பொறுத்தவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியே வெற்றி பெறும் என்பதால் இந்திய அணி வெற்றி பெற முழு பலத்துடன் ஆடுவார்கள் என்று கருதப்படுகிறது. இந்திய அணி இதுவரை 7 டி20 போட்டிகள் அயர்லாந்துடன் மோதியுள்ளது. 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி அதிகபட்சமாக 225 ரன்களும், அயர்லாந்து அணி 221 ரன்களும் எடுத்ததே அதிகபட்சம் ஆகும். முதன்முறையாக அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி முனைப்பு காட்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். நியூயார்க்கில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஹாட்ஸ்டாரிலும் பார்க்கலாம்.