நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி இந்திய அணி தனது சூப்பர் 8 வாய்ப்பை உறுதி செய்தது.


இந்திய அணிக்கு எங்கு? எப்போது? யாருடன்?


இந்த நிலையில், இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் எந்த அணியுடன் எந்த மைதானத்தில் விளையாட உள்ளது? என்ற தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அல்லது நெதர்லாந்து அணிகள் இடம்பிடித்துள்ளது.



  • சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி வரும் 20ம் தேதி தனது முதல் போட்டியில் விளையாடுகிறது. பார்படோஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடக்கிறது.

  • சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் வங்கதேசம் அல்லது நெதர்லாந்து அணியுடன் ஆண்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடக்கிறது.

  • இதையடுத்து, இந்திய அணி தனது சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடக்கிறது.


சூப்பர் 8 சுற்றுக்கு போட்டியிடும் அணிகள்:


குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், இரண்டாவது அணியாக முன்னேற வங்கதேசத்திற்கும், நெதர்லாந்து அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வங்கதேசம் அணி நேபாளத்தையும், நெதர்லாந்து அணி இலங்கையும் தங்களது கடைசி போட்டியில் எதிர்கொள்கின்றனர். இதில் வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி முன்னேறும். வங்கதேச அணிக்கே வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


சூப்பர் 8 சுற்றின் குரூப் 2 பிரிவில் தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்,  இங்கிலாந்து/ ஸ்காட்லாந்து, அமெரிக்கா/ பாகிஸ்தான் அணிகள் இடம்பிடித்துள்ளது. இதில் அடுத்து நடைபெற உள்ள போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்தே இங்கிலாந்து அணியா? ஸ்காட்லாந்து அணியா? அமெரிக்காவா? பாகிஸ்தானா? என்று தெரிய வரும்.


லீக் போட்டிகளிலே பல அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்ததால் சூப்பர் 8 சுற்றிலும் அதுபோன்ற முடிவுகள் கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.


மேலும் படிக்க: T20 WC 2024 Super 8: சூப்பர் 8 சுற்று..பாகிஸ்தானின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அமெரிக்கா - அயர்லாந்து போட்டி!


மேலும் படிக்க: AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்