AFG Vs PNG, T20 Wolrdcup: ஐசிசி டி-20 உலகக் கோப்பையில் புப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சி பிரிவிலிருந்து, மேற்கிந்திய தீவுகளை தொடர்ந்து இரண்டாவது, அணியாக ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதேபிரிவில் உள்ள நட்சத்திர அணியான, நியூசிலாந்து இதுவரை விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியுற்றதால், நடப்பு டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது. அதாவது மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளில் வென்றாலும், நீயூசிலாந்து அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாது. 


பப்புவா நியூ கினியா 95 ரன்களுக்கு ஆல்-அவுட்:


சி பிரிவில் உள்ள பப்புவா நியூ கினியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, டிரினிடார் அண்ட் டொபாகோவில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் அகாடெமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி வீரர்கள், அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஓரளவிற்கு தாக்குப்பிடித்த கிப்ளின் 32 பந்துகளை எதிர்கொண்டு 27 ரன்களை சேர்க்க, அலெய் நாவ் 13 ரன்களையும், டோனி உரா 11 ரன்களையும் சேர்த்தனர். இதனால், 19.5 ஓவர்களில் 95 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல்-அவுட்டானது.


ஆப்கானிஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சி:


இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில், இப்ராஹிம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க வீரரான குர்பாஸும் 7 ரன்களில் நடையை கட்ட 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறியது. அடுத்து வந்த ஒமர்சாயும் 13 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.


ஆப்கானிஸ்தான் அபார வெற்றி: 


இருப்பினும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய குல்பதின் நைப், சீரான இடைவெளியில் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினார். முன்னாள் கேப்டன் நபியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தார். இதனால், 15.1 ஓவர் முடிவில் இலக்கை எட்டி ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குல்பதின் 36 பந்துகளில் 49 ரன்களையும், முகமது நபி 23 பந்துகளில் 16 ரன்களையும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். குரூப் சுற்றில் இதுவரை விளையாடிய 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.


நியூசிலாந்து வெளியேற்றம்:


சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கும் எதிரான லீக் போட்டியில் தோல்வியை தழுவியது. இதனால் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும், 4 புள்ளிகளை மட்டுமே ஈட்ட முடியும். ஆனால், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளுமே, ஏற்கனவே தலா 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.