2024 டி20 உலகக் கோப்பையில் நேற்று இந்திய அணி அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 10 பந்துகள் மீதமுள்ள நிலையில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது. 


இதையடுத்து நடப்பு டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் வீழ்த்தி இந்திய அணி ஹார்ட்ரி வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய டி20 உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடிய பிறகு, ஒரு போட்டியிலும் கூட ஒன்னும் செய்யாத இந்திய வீரர் இருக்கிறார். அவர்தான் ரவீந்திர ஜடேஜா. 


3 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் ஜீரோ: 


இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, நடப்பு 2024 டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும், இந்த 3 போட்டிகளிலும் ஜடேஜாவால் ஒரு ரன், ஒரு விக்கெட், ஒரு கேட்சை கூட பிடிக்க முடியவில்லை. உண்மையை சொல்லபோனால் 2024 டி20 உலகக் கோப்பையில் ரவீந்திர ஜடேஜாவால் இதுவரை எதுவும் செய்ய முடியவில்லை. 






0 ரன்கள்... 0 விக்கெட் மற்றும் 0 கேட்சுகள்:


நடப்பு டி20 உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே பேட்டிங் செய்யும் வாய்ப்பு ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும், ஜூன் 9ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். மேலும், அயர்லாந்து மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டங்களில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில், எப்போதும் சிறந்த பீல்டிங்கிற்கு பெயர் போன ரவீந்திர ஜடேஜாவால் 2024 டி20 உலகக் கோப்பையில் ஒரு ரன் அவுட் அல்லது ஒரு கேட்ச் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


பந்துவீச வாய்ப்பு கொடுக்காத ரோஹித் சர்மா: 


அமெரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில், கேப்டன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு ஓவர் கூட வீச வாய்ப்பளிக்கவில்லை. முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்கள் வீசிய ரவீந்திர ஜடேஜா 10 ரன்கள் கொடுத்திருந்தார். அப்போது, அவரால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. அதேபோல், அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா 1 ஓவரில் 7 ரன்கள் கொடுத்தார். இந்தப் போட்டியிலும் ரவீந்திர ஜடேஜாவால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை.


இந்திய ப்ளேயிங் 11ல் இடம் பிடிக்க குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றன. ஆல் ரவுண்டர் என்ற முறையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இருப்பினும், இதுவரை ஜடேஜாவால் சிறப்பாக எதையும் செய்ய முடியவில்லை. எனவே, அடுத்து நடைபெறும் கனடாவுக்கு எதிரான போட்டியில் ஜடேஜா விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டு வருகிறது.