ஜூன் 12ம் தேதியான இன்று இந்தியாவும் அமெரிக்காவும் டி20 உலகக் கோப்பை 2024 இல் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இரு அணிகள் மோதும் இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 


டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது.


அமெரிக்கா சார்பில் அதிகபட்சமாக நிதிஷ்குமார்  2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 27 ரன்களும், ஆரோன் ஜோன்ஸ் 11 ரன்களும் எடுத்திருந்தனர் ஹர்மீத் சிங் 10 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்தது அமெரிக்கா.


இந்திய தரப்பில் அர்ஷ்தீப் 4 ஓவர்களில் 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 


இந்திய அணி சேஸிங்: 


111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர்.


இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே விராட் கோலியை கோல்டன் டக் அவுட்டாக சவுரப் நெத்ராவால்கர் வெளியேற்றியதால், இந்திய அணியின் தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது. விராட் கோலி அவுட்டாகி 12 பந்துகள் மட்டுமே கடந்திருந்த நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இதற்கிடையில், ரிஷப் பண்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் 29 ரன்கள் சேர்த்து பவர்பிளே ஓவர் வரை அணியின் ஸ்கோரை 33 ரன்களுக்கு கொண்டு சென்றனர்.


இதற்கிடையில், எட்டாவது ஓவரில் 18 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரிஷப் பண்ட் அலி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து அடுத்த 6 ஓவர்களில் இந்திய அணி 19 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே மீது அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. இதை சரிசெய்யும் விதமாக 14வது ஓவரில் இருந்து சூர்யகுமாரும், துபேயும் இந்திய அணியின் ஸ்கோரை வேகமெடுக்கத் தொடங்கினர்.


தொடர்ந்து, இருவரும் பவுண்டரிகளை விரட்ட இந்திய அணி 15 ஓவர்களில் 76 ரன்களுக்கு கொண்டு சென்றார். இதற்கிடையில், அமெரிக்க அணி மூன்று முறை ஓவரைத் தொடங்க 60 வினாடிகளுக்கு மேல் எடுத்ததால், இதன் காரணமாக, இந்திய அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக கிடைத்தது. பெனால்டிக்கு பிறகு கடைசி 5 ஓவர்களில் இந்தியாவுக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. அதன்பிறகு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடக்க, 18.2 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. 


சூப்பர்-8 மீதான பாகிஸ்தானின் நம்பிக்கை:


பாகிஸ்தான் அணி சூப்பர்-8க்கு செல்வதற்கான வாய்ப்பை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்படுத்தி கொடுத்துள்ளது.  போட்டியை நடத்தும் அமெரிக்காவை இந்திய அணி தோற்கடித்ததால், சூப்பர்-8க்கு செல்லும் பாகிஸ்தானின் பாதை உருவாகும் என்று இருந்தது, பாகிஸ்தான் அணி அடுத்ததாக சூப்பர் 8க்கு செல்ல வேண்டுமானால், அயர்லாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதனுடன், அமெரிக்கா தனது லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் அயர்லாந்திடம் தோற்க வேண்டும்.