ஜூன் 12ம் தேதியான இன்று இந்தியாவும் அமெரிக்காவும் டி20 உலகக் கோப்பை 2024 இல் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இரு அணிகள் மோதும் இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 


டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.


முதல் இன்னிங்ஸ்: 


இந்திய அணிக்காக முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் முதல் பந்திலேயே ஜஹாங்கிரை வெளியேற்றினார். இதையடுத்து, ஆண்ட்ரீஸ் கோஸ் பேட்டிங் செய்ய வந்தபோது, அவரை 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் செய்தார் அர்ஷ்தீப். முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 3 ரன்கள் எடுத்தது அமெரிக்கா. இதற்கிடையில், பவர்பிளே முடியும் வரை, அமெரிக்காவால் 18 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆரோன் ஜோன்ஸ் மற்றும் ஸ்டீவன் டெய்லர் ஒரு கட்டத்தில் செட் செய்ய முயற்சித்தபோதும், ஜோன்ஸ் 11 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.






முதல் 10 ஓவர்களில் அமெரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் மட்டுமே எடுக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. முக்கிய இன்னிங்ஸ் விளையாடுவார் என்று டெய்லரிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் 12 வது ஓவரில், அக்சர் படேல் 24 ரன்களில் டெய்லரை அவுட் செய்து அசத்த, நிதிஷ் குமாரும் 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்த 15வது ஓவரில் அவுட் ஆனார். 15 ஓவர்கள் முடிவில் அமெரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. வேகமாக ரன்கள் எடுக்கும் முயற்சியில் கோரி ஆண்டர்சன் பெரிய ஷாட் ஆடச் சென்று ரிஷப் பந்திடம் கேட்ச் ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்து, இறுதியாக 18வது ஓவரில் அமெரிக்கா 100 ரன்களை தொட்டது. அடுத்த 2 ஓவர்களில் அமெரிக்க அணியால் 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக அமெரிக்க அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


அர்ஷ்தீப் சிங்கின் அற்புதமான பந்துவீச்சு:


அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீசி முதல் பந்திலேயே முதல் விக்கெட்டை எடுத்து அசத்தினார். இந்தப் போட்டி முழுவதும் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் 4 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ஷயான் ஜஹாங்கிரை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்தார் அர்ஷ்தீப். அதன்பிறகு ஆண்ட்ரீஸ் கவுஸ், நிதிஷ் குமார், ஹர்மீத் சிங் ஆகியோரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாகவும் இது அமைந்தது. இவருக்கு முன், 2014ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரில் இந்த சாதனை இருந்தது.