ஐசிசி தரப்பில் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர், டி20 உலகக்கோப்பைத் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என மொத்தம் மூன்று வகைக் கிரிக்கெட் போட்டிகளுக்கும் நடத்தப்படுகிறது. இதில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள் உலககக்கோப்பையும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டி20 உலகக்கோபையும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் நடத்தப்படுகிறது. 


டி20 உலகக்கோப்பை:


இதில் இந்தமுறை அதாவது 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடு பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐசிசி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர்பாக மிகவும் கோலாகலமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அதாவது 2024ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரின் ஒரு பகுதியை அமெரிக்காவின் மூன்று மாகாணங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர். அதாவது, அமெரிக்காவின், டல்லாஸ், புளோரிடா மற்றும் நியூயார்க் ஆகிய மாகாணங்களில் இந்த தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டு மீதான ஆர்வத்தை பொதுமக்கள் மத்தியில் விதைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 


அமெரிக்காவில் உலகக்கோப்பை:


டி20 உலகக் கோப்பையை முதன்முறையாக அமெரிக்கா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி, புளோரிடாவில் உள்ள ப்ரோவர்ட் கவுண்டி மற்றும் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஆகிய இடங்களில் உலகக்கோப்பைத் தொடர் நடத்தப்படவுள்ளது. 




வரவிருக்கும் தொடருக்காக  மாடுலர் ஸ்டேடியம் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. நியூயார்க்கின் நாசாவ் கவுண்டியில் உள்ள ஐசன்ஹோவர் பூங்காவில் 34,000 இருக்கைகள் கொண்ட மாடுலர் ஸ்டேடியத்தை உருவாக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது, இதற்கு அடுத்த மாதம் அனுமதியை வழங்குவது குறித்து நியூயார்க்கின் நாசாவ் கவுண்டியில் உள்ள விளையாட்டு முடிவெடுக்கவுள்ளதாகும் ஐசிசி தெரிவித்துள்ளது. 


மூன்று மைதானங்கள்:


மிகப்பெரிய டி20 உலகக் கோப்பைக்கான இடங்களை அறிவிப்பதில் ஐசிசி தலைமை நிர்வாகி ஜெஃப் அலார்டிஸ் மகிழ்ச்சி அடைவதாகவும், “20 அணிகள் கோப்பைக்காக போட்டியிடும் மிகப்பெரிய ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியை நடத்தும் மூன்று USA மைதானங்களை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அமெரிக்கா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சந்தை நாடாகும். மேலும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு சந்தையில் ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு இந்த இடங்கள் சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் மற்றும் பலதரப்பட்ட சமூகங்களை ஒன்றிணைக்கும் அதன் திறனைப் பற்றிய விழிப்புணர்வு அமெரிக்காவில் வளர்ந்து வருவதாகவும்” அவர் தெரிவித்தார். 




உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றான ஆண்கள் டி20 உலகக் கோப்பையை நடத்துவதற்கு ஐசிசியுடன் இணைந்து அமெரிக்கா முதல் முறையாக இணைந்துள்ளது.