இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியானது தொடங்க இன்னும் சரியாக 14 நாட்களே உள்ளது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் பயிற்சி போட்டிகளில் விளையாட இருக்கிறது. 


இந்த பயிற்சி ஆட்டங்கள் வருகின்ற செப்டம்பர் 29 முதல் தொடங்குகிறது. இந்த நாளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டி உட்பட மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகின்றன. இருப்பினும்,  பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டியை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தை காண ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஐசிசி சார்பில் கூறப்பட்டுள்ளது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கு போதிய பாதுகாப்பு வழங்க முடியாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிக்கு டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கப்படும் என பிசிசிஐ உறுதி அளித்துள்ளது. 


அன்றைய நாளில் என்னென்ன பயிற்சி போட்டிகள்..?


செப்டம்பர்-29: மதியம் 2 மணி



  • வங்கதேசம் vs இலங்கை

  • ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா

  • நியூசிலாந்து vs பாகிஸ்தான் 


பாதுகாப்பு வழங்க முடியாத காரணம் என்ன..? 


வருகின்ற செப்டம்பர் 29ம் தேதி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான பயிற்சி ஆட்டத்தின் நாளில் ஹைதராபாத்தில் விநாயகர் வர்ஷா மற்றும் மிலன் -உன்-நபி ஊர்வலம் நடைபெற இருக்கிறது. எனவே, இந்த நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக, இந்த போட்டிக்கு போதிய பாதுகாப்பை வழங்க முடியாததால், போட்டியை ஒத்திவைக்குமாறு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு (HCA) நகர காவல்துறை அறிவுறுத்தியது. ஆனால் ஏற்கனவே பலமுறை உலகக் கோப்பை அட்டவணையை மாற்றிவிட்டதால் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை ஏற்பாட்டாளர்கள் நிராகரித்தனர். தற்போது இந்த போட்டியை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அக்டோபர் 9 மற்றும் அக்டோபர் 10 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடர்ந்து இரண்டு உலகக் கோப்பை 2023 லீக் போட்டிகள் நடைபெறுவதற்கு பாதுகாப்பு முகமைகள் முன்னதாக ஆட்சேபனை தெரிவித்தன. அக்டோபர் 10 ஆம் தேதி பாகிஸ்தான் vs இலங்கை மற்றும் அக்டோபர் 9 ஆம் தேதி நியூசிலாந்து vs நெதர்லாந்து இடையிலான போட்டிகள் நடைபெறுகிறது. ஒரு போட்டிக்காக சுமார் 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பாகிஸ்தான் அணியினர் தங்கியுள்ள ஹோட்டலிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


ஏற்கனவே அட்டவணையில் பல மாற்றங்கள்:


2023 உலகக் கோப்பைக்கு முன்னதாக வெளியிடப்பட்ட அட்டவணையில் ஏற்கனவே பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சுமார் ஒன்பது போட்டிகள் மாற்றம் செய்யப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியும் அடங்கும். முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை போட்டியை அக்டோபர் 15 ஆம் தேதி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அன்று, நவராத்திரி விழாவின் முதல் நாள் என்பதால் குஜராத் முழுவதும் உற்சாகமாக விழா கொண்டாடப்பட இருக்கிறது. எனவே, இரண்டிற்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட முடியாது என கருதி, போட்டியை ஒரு நாள் முன்னதாக (அதாவது, அக்டோபர் 15ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 14ம் தேதி) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.