நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 சீசனை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 டி20 உலகக் கோப்பை போட்டியானது வருகின்ற ஜூன் மாதம் தொடங்குகிறது. 2022ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையானது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 


டி20 உலகக் கோப்பையின் 9வது பதிப்பு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெறுகிறது. இதையடுத்து, மே 1ம் தேதிக்குள் உலகக்கோப்பைகளில் பங்கேற்கும் 20 அணிகளும் தங்களின் 15 பேர் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட பல நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வாரியம் தங்களின் அணிகளின் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில், பாகிஸ்தான் உள்ளிட்ட சில அணிகள் வெளியிடவில்லை. 


இந்தநிலையில் ஐசிசி தற்போது 2024 டி20 உலகக் கோப்பைக்கான அம்பயர்கள் மற்றும் மேட்ச் ரெஃப்ரி உள்ளிட்ட 26 நபர்கள் கொண்ட பெயர்களை வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் குமார் தர்மசேனா, நிதின் மேனன், ரிச்சர்ட் கெட்டில்பரோ போன்ற பிரபலமான அம்பயர்களும், ஜெஃப் குரோவ் போன்ற அனுபவம் வாய்ந்த மேட்ச் ரெஃப்ரிகளும் இடம் பெற்றுள்ளனர். 






இதுகுறித்து ஐசிசி பொது மேலாளர் வாசிம் கான் தெரிவிக்கையில், “ 2024 டி20 உலகக் கோப்பைக்கான அனுபவம் வாய்ந்த போட்டி நடுவர்களின் பெயர்களை தற்போது வெளியிட்டுள்ளோம். இவர்களின் சிறப்புமிக்க செயல்பாடுகள் உலகக் கோப்பையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று நம்புகிறோம். 


20 அணிகள் 28 நாட்களில் 55 போட்டிகளில் விளையாடவுள்ளனர். இதன்மூலம், இது மிகப்பெரிய டி20 உலகக் கோப்பையாக இருக்கும். இதில், நியமிக்கப்பட்டுள்ள அம்பயர்கள் அடங்கிய குழுவை நினைத்து பெருமைப்படுகிறோம். மேலும், எங்கள் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். இதன் காரணமாக விரைவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகள் பரபரப்பானதாக இருக்கும் என்று உறுதியளிக்கும் வகையில் அவர்களுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்தார். 


2024 டி20 உலகக் கோப்பைக்கான போட்டி நடுவர்களின் முழுமையான பட்டியல்


அம்பயர்கள்:  கிறிஸ் பிரவுன், குமார் தர்மசேனா, கிறிஸ் கஃபனே, மைக்கேல் கோஃப், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், அல்லாஹுடியன் பலேக்கர், ரிச்சர்ட் கெட்டில்பரோ, ஜெயராமன் மதனகோபால், நிதின் மேனன், சாம் நோகஜ்ஸ்கி, அஹ்சன் ராசா, ரஷித் ரியாஸ், பால் ருசிட், லாங்டன் ரீஃபெல் ரோட்னி டக்கர், அலெக்ஸ் வார்ஃப், ஜோயல் வில்சன் மற்றும் ஆசிஃப் யாகூப்.


மேட்ச் ரெஃப்ரிகள்: டேவிட் பூன், ஜெஃப் குரோவ், ரஞ்சன் மதுகல்லே, ஆண்ட்ரூ பைக்ராஃப்ட், ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத்.


மேட்ச் ரெஃப்ரி என்பது தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆகும்.  


இந்திய அணியின் முதல் போட்டி..? 


2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக வருகின்ற ஜூன் 5ஆம் தேதி விளையாட இருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஜூன் 9ஆம் தேதி இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்குகிறது.