மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.


ஐ.பி.எல் 2024:


ஐபிஎல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (மே3) 50 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் களம் இறங்கினார்கள். இவர்கள் இருவரும் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார் பிலிப் சால்ட். பின்னர் சுனில் நரைன் உடன் ஜோடி சேர்ந்தார் அங்கிரிஷ் ரகுவன்ஷி.


அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் - மணீஷ் பாண்டே:


6 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனிடையே மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் துஷாரா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களிலும், சுனில் நரைன் 8 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 43 ரன்கள் இருந்த போது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பறிகொடுத்தது கொல்கத்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இந்த நிலையில் தான் வெங்கடேஷ் ஐயர் களம் இறங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் 9 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக்கட்ட பின்னர் வந்த மணீஷ் பாண்டே அதிரடியாக விளையாடினார். 


170 ரன்கள் இலக்கு:


தத்தளித்துக் கொண்டிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இவர்களது ஜோடி நம்பிக்கை அளித்தது. இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த வெங்கடேஷ் ஐயர் 36 பந்துகளில் அரைசதத்தை 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் பதிவு செய்தார். அப்போது மணீஷ் பாண்டே ஹர்திக் பாண்டியா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தாக களம் இறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் அதே ஓவரில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனைத்தொடர்ந்து களம் இறங்கிய ரமன்தீப் சிங் மற்றும் மிட்செல் ஸ்டார்க் சொற்ப ரன்களில் விக்கெட் இழந்தனர். இவ்வாறாக 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 169 ரன்கள் எடுத்துள்ளது. இதில் வெங்கடேஷ் ஐயர் 52 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது.