First ICC Men's T20 World Cup: கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையானது இதுவரை 8 முறை நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்தநிலையில் 9வது பதிப்பாக டி20 உலகக் கோப்பை 2024 இந்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நாளை (ஜூன் 2) முதல் தொடங்க உள்ளது. இதில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 20 அணிகள் களமிறங்கி ஒன்றுக்கொன்று மோதவுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பையில், இந்த 20 அணிகளில் 10 பெரிய அணிகளும், 10 சிறிய அணிகளும் அடங்கும். இப்படி, வெற்றிகரமாக நடந்த முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது யார்..? இந்த போட்டி எங்கு நடைபெற்றது..? முதல் டி20 உலகக் கோப்பையில் எந்த நாடுகள் எல்லாம் பங்கேற்றது என்ற முழு விவரங்களை பார்க்கலாம். 


முதல் டி20 உலகக் கோப்பை எப்போது, ​​எங்கு விளையாடப்பட்டது?


முதல் டி20 உலகக் கோப்பையானது 2007ம் ஆண்டு 13 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் போட்டி 11 செப்டம்பர் 2007 அன்று தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவில் உள்ள மூன்று கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முதலாவது ஸ்டேடியமானது கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 22 ஆயிரம் பார்வையாளர்களுடனும், இரண்டாவது டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் கிரிக்கெட் ஸ்டேடியம் 25 ஆயிரம் பார்வையாளர்களுடனும், மூன்றாவது ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் ஸ்டேடியம் 34 ஆயிரம் பார்வையாளர்களுடனும் அமரும் வசதியுடன் நடந்தது. 


முதல் டி20 உலகக் கோப்பையை விளையாடிய நாடுகள் எது?


13 நாட்கள் நடந்த முதல் டி20 உலகக் கோப்பையில், 12 நாடுகளுக்கு இடையே போட்டிகள் நடந்தன. இதில் 10 பெரிய அணிகளும், இது தவிர இரண்டு சிறிய அணிகளும் இந்த முதல் டி20 உலகக் கோப்பையில் இடம்பிடித்திருந்தது. இந்த 2007ம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய பெரிய கிரிக்கெட் அணிகளும், கென்யா மற்றும் ஸ்காட்லாந்து போன்ற வளர்ந்து வரும் அணிகளும் விளையாடியது. 


முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது யார்?


2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் முதல் இறுதிப் போட்டி 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்றது. ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் இந்தியா வெற்றிபெற்று முதல் டி20 உலகக் கோப்பை சாம்பியன் என்ற அந்தஸ்தை பெற்றது. இந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.


பதிலுக்கு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் கூட முழுதாக விளையாட முடியவில்லை. 19.3 ஓவரில் 152 ரன்களுக்குள் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 


இந்தப் போட்டியில் டையை தீர்க்க ஒரு புதிய விதி பயன்படுத்தப்பட்டது . இந்த விதியின் பெயர் ஸ்பீக்-அவுட். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான குரூப்-ஸ்டேஜ் போட்டியில் இந்த விதி பயன்படுத்தப்பட்டது. இதன்பிறகே, இரு அணிகளுக்கு இடையிலான போட்டி டையானால் சூப்பர் ஓவர் விதி அறிமுகப்படுத்தப்பட்டது. 


மேலும், இந்த 2007 டி20 உலகக் கோப்பையில்தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங், ஸ்டீவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸரை பறக்கவிட்டார்.