ஒருபோதும் ரசிகர்களின் அதீத ஆதரவை அழுத்தம் என்று சொல்ல மாட்டேன் என்று விராட் கோலி கூறியுள்ளார்.


டி20 உலகக் கோப்பை 2024:



ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டிகள் நாளை தொடங்க உள்ளது. அதன்படி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் இந்த போட்டிகளில் இந்தியா, கனடா, அயர்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான், நமீபியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, ஓமன், உகாண்டா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட  20 நாடுகள் பங்கேற்று விளையாட உள்ளன. அந்தவகையில் இந்திய அணி ரோஹித் ஷர்மா தலைமையில் விளையாட உள்ளது.  


கடந்த சில நாட்களுக்கு முன்னரே இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவிற்கு சென்று விட்டனர். அதேநேரம் நேற்று தான் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மும்பையில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றார். கிட்டதட்ட இந்திய வீரர்கள் அனைவருமே அமெரிக்காவிற்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 


அதேநேரம் கடந்த 11 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணி எந்த ஒரு ஐசிசி கோப்பைகளையும் வெல்ல வில்லை. இந்த முறையாவது அந்த ஏக்கத்தை இந்திய அணி தீர்த்து வைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எப்படியும் டி20 உலகக் கோப்பையை வென்ற விட வேண்டும் என்று தான் இந்திய அணியும் முனைப்பும் காட்டும். அதேபோல் இந்திய அணிக்கு ரசிகர்களிடம் இருந்து கடும் அழுத்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


அழுத்தம் என்று சொல்ல மாட்டேன்:


இந்நிலையில் தான் இதுகுறித்து இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி பேசுகையில், ”ஒருபோதும் ரசிகர்களின் அதீத ஆதரவை அழுத்தம் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் ரசிகர்களிடம் சென்று எங்களிடம் இருந்து வெற்றியை எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்ல முடியாது. நமது நாட்டில் கிரிக்கெட் மீதான பார்வை முற்றிலும் வேறாக உள்ளது. அதுதான் நம்முடைய பலமாக உள்ளது.


ஒருவேளை அதீத கவனத்தை ரசிகர்களின் எதிர்பார்ப்பு மீது வைக்கும் போது, நிச்சயம் பலவீனமாகவும் மாறிவிடும்” என்றார் விராட் கோலி. தொடர்ந்து பேசிய அவர், “இந்திய அணியினர் அதனை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு வெற்றிக்கான ஊக்கமாக பார்க்க வேண்டும். ஏனென்றால் நாம் வெற்றிபெற வேண்டும் என்று நமக்கு பின் ஏராளமானோர் ஆதரவாக நிற்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: Rohit Sharma: டி20 உலகக் கோப்பை: அதிக போட்டிகளில் விளையாடிய ஒரே இந்தியர்..ரோஹித் சர்மாவின் சாதனை பட்டியல்!


 


மேலும் படிக்க: T20 World Cup Records: டி20 உலகக் கோப்பை: அதிக வெற்றிகளை பெற்ற இந்திய அணி! முழு புள்ளிவிவரம் உள்ளே!