இந்தியா vs வங்கதேசம் இடையிலான டி20 உலகக் கோப்பை 2024ன் பயிற்சி ஆட்டத்தில் இன்று நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. 


இந்த போட்டி இரு அணிகளுக்கும் சர்வதேச போட்டியாக கணக்கிடப்படாது. எனவே, இரு அணிகளும் தங்கள் 15 வீரர்களை களமிறக்கி முயற்சிக்கலாம். இந்திய அணி தனது ஒரே பயிற்சி ஆட்டத்தை வங்கதேசத்திற்கு எதிராக இன்று களமிறங்குகிறது. போட்டி நடைபெறும் நாளான இன்று நியூயார்க்கில் வெப்பநிலையானது 28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், பகலில் வானம் தெளிவாக இருக்கும் என்றும், இரவில் சற்று மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், மழைக்கான வாய்ப்புகள் குறைவுதான். 


பிட்ச் ரிப்போர்ட்: 


இந்தியா - வங்கதேசம் இடையிலான வார்ம்- அப் போட்டியானது ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட டிராப் - இன் பிட்ச்சில் நடைபெறுகிறது. நியூயார்க் ஸ்டேடியமும் அடிலெய்டு போல கடலுக்கு அருகில் இருப்பதால், வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமாக பவுன்ஸும், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ரன்களும் குவிய வாய்ப்புள்ளது.  பிட்சை பொறுத்தவரை இதுவரை இந்த பிட்ச்சில் எந்தவொரு சர்வதேச டி20 போட்டியும் நடைபெற்றதில்லை. எனவே, ஒரு சில ஓவர்களுக்கு பிறகே, முதலில் பேட்டிங் செய்யும் அணியால் பிட்சின் நிலைமையை புரிந்துகொள்ள முடியும். 


இந்திய அணி தனது நான்கு குரூப் போட்டிகளிலும் அமெரிக்காவில் விளையாடவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டுச் செல்கிறது.  ஒரே பயிற்சி ஆட்டம் என்பதால் கேப்டன் ரோஹித் சர்மா எந்த வீரர்களுடன் களமிறங்குவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


விராட் கோலி விளையாடுவாரா..? 


இன்றைய வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடுவாரா என்பது தெரியவில்லை. 2024 டி20 உலகக் கோப்பைக்காக விராட் கோலி சற்று முன்தான் அமெரிக்கா சென்றுள்ளார். ஐபிஎல் முடிந்த பிறகு விராட் கோலி இந்திய அணி வீரர்களுடன் அமெரிக்காவிற்கு  செல்லவில்லை.


விராட் கோலி 2024 டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றடைய விமானம் மூலம் 16 மணி நேர நீண்ட பயணத்தை எடுத்துக்கொண்டார். இதுபோன்ற சூழ்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கோலி விளையாடுவாரா என்பது அவர் எப்படி உணர்கிறார் என்பதைப் பொறுத்தே அமையும். 


பயிற்சியில் பங்கேற்காத விராட் கோலி:






விராட் கோலி இந்திய அணி வீரர்களுடன் வராததால் சில பயிற்சி அமர்வுகளை தவறவிட்டார். டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக பெரும்பாலான இந்திய வீரர்கள் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்பாகவே நியூயார்க் சென்றடைந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று) மட்டும் விருப்ப பயிற்சி அமர்வு இருந்தது. இந்த அமர்வில் ரிங்கு சிங், முகமது சிராஜ் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டனர்.