IND Vs SA, T20 Worldcup Final 2024: இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோத உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி, பார்படாஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஃபைனலில் இந்தியா Vs தென்னாப்ரிக்கா:


ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 20 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக் சுற்று, சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டிகள் ஆகியவற்றை தொடர்ந்து, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மூன்றாவது முறையாகவும், தென்னாப்ரிக்கா அணி முதல் முறையாகவும் முன்னேறியுள்ளது. தங்களது இரண்டாவது டி20 கோப்பையை வெல்ல இந்திய அணியும், முதல் ஐசிசி கோப்பையை வெல்ல தென்னாப்ரிக்கா அணியும் ஆர்வம் காட்டி வருகின்றன.


போட்டி எங்கு, எப்போது பார்க்கலாம்?


இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய அணிகள் மோது இறுதிப்போட்டி, இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. பார்படாஸ் தீவில் அமைந்துள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இதனை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் செயலியிலும் கண்டுகளிக்கலாம்.


பார்படாஸ் மைதான புள்ளி விவரங்கள்:


பார்படாஸ் மைதானத்தில் இதுவரை 32 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில், முதலில் பேட்டிங் செய்த அணிகள் 19 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகளில் முடிவுகள் எட்டப்படவில்லை. அதிகபட்சமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி 224 ரன்களை குவித்துள்ளது. அதேநேரம், குறைந்தபட்சமாக தென்னாப்ரிக்க அணிக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் அணி 80 ரன்களை சேர்த்தது. இங்கிலாந்திற்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி 172 ரன்களை எட்டியது அதிகபட்ச சேஸிங்காக உள்ளது. தனிநபர் சாதனையில் ஒரு போட்டியில் போவெல் விளாசிய 107 ரன்கள் அதிகபட்ச ஸ்கோராகவும், ஹோல்டர் 5 விக்கெட்டுகள் சிறந்த பந்துவீச்சாகவும் உள்ளது. இரண்டு சாதனைகளுமே இங்கிலாந்து அணிக்கு எதிராகவே நிகழ்ந்துள்ளது.


வானிலை அறிக்கை:


வானிலை அறிக்கையின்படி இறுதிப்போட்டி நடைபெற உள்ள ஜுன் 29ம் தேதி, பார்படாஸ் மைதானம் பகுதியில் நாள் முழுவதும் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. அதேநேரம், நடப்பு உலகக் கோப்பையில் பல போட்டிகளின் போதும், மழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்தாலும் வானிலை மாறிய வண்ணமே இருந்தது.


ரிசர்வ் டே:


ஒருவேளை நாளை கனமழை பெய்து போட்டி பாதிக்கப்பட்டாலும், இறுதிப்போட்டிக்காக ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 29ம் தேதி நாள் முழுவதும் மழை பெய்து போட்டி நடைபெறாவிட்டாலும், அதற்கு மாற்றாக 30ம் தேதி இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் இறுதிப்போட்டி நடைபெறும். 


ரிசர்வ் டே பாதிக்கப்படால்?


ஒருவேளை ரிசர்வ் டேவும் மழையால் பாதிக்கப்பட்டு, ஓவர்களை குறைத்து கூட போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், இந்திய அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். காரணம், சூப்பர் 8 சுற்றின் முடிவில் இந்திய அணியின் நெட் ரன் ரேட் என்பது +2.017 ஆகவும், தென்னாப்ரிக்கா அணியின் நெட் ரன் ரேட் என்பது +0.599 ஆகவும் உள்ளது. சூப்பர் சுற்றின் முடிவில் இரு அணிகளும் தங்களது பிரிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்த நிலையில், ரன் ரேட் அடிப்படையில் சாம்பியன் யார் என்பது இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.