IND Vs SAM T20 Worldcup Final: இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபைனலில் இந்தியா..!
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தலைமயில் இந்திய அணி விளையாட உள்ள, மூன்றாவது ஐசிசி தொடரின் இறுதிப் போட்டி இதுவாகும். கடைசியாக விளையாடிய இரண்டு ஃபைனல்லும் இந்திய அணி தோல்வியுற்று இருந்தாலும், ஐசிசி கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு இது சரியான தருணமாக கருதப்படுகிறது. மேலும், கடந்த 11 ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஒன்றை கூட கைப்பற்றவில்லை என்ற மோசமான சூழலையும் மாற்றி அமைக்கக் கூடும்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா:
கடந்த நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்று, அந்த பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது. ஆனால், அதற்கு பிறகு ஒருமுறை கூட இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இறுதியாக கடந்த 2014ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினாலும், கோப்பையை வெல்லும் வாய்ப்பை இலங்கை அணியிடம் பறிகொடுத்தது. அதற்கடுத்த டி20 உலகக் கோப்பைகளில் நாக் அவுட் போட்டிகள் வரை முன்னேறினாலும், இறுதிப்போட்டியை கூட எட்டமுடியவில்லை. இந்நிலையில் தான் கடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியாவை மோசமாக வீழ்த்திய இங்கிலாந்து அணியை, தோற்கடித்து ரோகித் தலைமையிலான அணி இந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி:
கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு வலுவான அணியாகவே திகழ்கிறது. குறிப்பாக, ஐசிசி போட்டிகளில் அவரது தலைமையிலான இந்திய அணி இதுவரை வெறும் 3 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால், அந்த மூன்றுமே இரண்டு இறுதிப்போட்டி மற்றும் ஒரு அரையிறுதிப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஐசிசி கோப்பையை வெல்ல மீண்டும் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பு, கை நழுவி செல்ல விடக்கூடாது என்பதில் ரோகித் சர்மா தீவிரமாக உள்ளார். லீக் சுற்றில் தடுமாறினாலும், முக்கியமான கட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் அரைசதங்கள் விளாசியதன் மூலம், ரோகித் சர்மா தன்னம்பிக்கை கூடி புத்துணர்ச்சி பெற்று திகழ்கிறார். இறுதிப்போட்டியில் வென்றால், இந்திய அணிக்காக ஐசிசி கோப்பையை கைப்பற்றிய மூன்றாவது கேப்டன் என்ற பெருமை ரோகித் சர்மாவிற்கு கிட்டும்.
தயார் நிலையில் இந்திய அணி..!
நடப்பு டி20 உலகக் கோப்ப்பையில் இந்திய அணியின் பிரதான பலம் என்பது பந்துவீச்சு என்பதே உண்மை. பும்ரா வழிநடத்து பவுலிங் யூனிட்டில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் துல்லியமாக பந்துவீசுவதோடு, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் எடுத்து வருகின்றனர். சுழற்பந்துவீச்சில் குல்தீப் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் எதிரணிக்கு மிடில் ஓவர்களில் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். பேட்டிங் யூனிட் தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், சரியான நேரத்தில் பேட்ஸ்மேன்கள் சரியான நேரத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ளனர்.குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ரன் குவித்து வருகின்றனர். இறுதிக் கட்டங்களில் அக்ஷர் படேலும் கைகொடுப்பது அணிக்கு பலன் அளிக்கிறது. இதன் காரணமாக இரண்டாவது முறையாக டி20 உலக் கோப்பையை வெல்ல முழுவீச்சில் தயாராகி வருகிறது.
இந்திய அணியில் உள்ள பிரச்னைகள்:
இந்திய அணி வலுவாக இருந்தாலும், சில முக்கிய பிரச்னைகள் இல்லாமல் இல்லை. குறிப்பாக நட்சத்திர வீரர் கோலி நடப்பு உலகக் கோப்பை தொடக்க வீரராக களமிறங்கி வந்தாலும், இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மொத்தமாகவே கூட 100 ரன்களை கூட சேர்க்கவில்லை. ஐபிஎல் தொடரில் சிக்சர்களாக விளாசிய ஷிவம் துபே, இந்திய அணியின் வெற்றிக்கு எந்தவகையிலும் பங்களிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆல்-ரவுண்டர் ஜடேஜாவும் இதுவரை மேட்ச் வின்னிங் நாக் என எதையும் வெளிப்படுத்தவில்ல. இந்திய ரசிகர்களின் ஐசிசி கோப்பை பலிக்க வேண்டும் என்றால், தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்த மூன்று வீரர்களுகும் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.