ENG vs NAM T20 World Cup 2024 Match Highlights: டி20 உலகக் கோப்பை 34வது போட்டியில் இங்கிலாந்து டக்வொர்த் லூயிஸ் விதியின் கீழ் 41 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர்-8 சுற்றுக்கு செல்லும் என்ற நம்பிக்கையை இங்கிலாந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. இப்போது சூப்பர்-8-ஐ எட்டுவது என்ற இங்கிலாந்தின் முடிவு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் போட்டியில் ஸ்காட்லாந்தின் வெற்றி அல்லது தோல்வியால் தீர்மானிக்கப்படும். குரூப் ஸ்டேஜ்களில் நான்கு போட்டிகளிலும் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 5 புள்ளிகளையும், ஸ்காட்லாந்து 3 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகளையும் பெற்றுள்ளன. இருப்பினும், இங்கிலாந்தின் அணியின் ரன் ரேட் ஸ்காட்லாந்தை விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


தற்போது குரூப் ஸ்டேஜில் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்காட்லாந்து விளையாடுகிறது. ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால், அந்த அணி சூப்பர்-8க்கு முன்னேறும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்காட்லாந்து தோல்வியடைந்தால், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சிறந்த நிகர ரன் ரேட் கொண்ட அணி சூப்பர்-8க்கு தகுதி பெறும். ஆஸ்திரேலிய அணியுடன் சேர்ந்து சூப்பர்-8க்கு செல்லும் குரூப் பி-ல் உள்ள மற்ற அணி யார் என்பது இப்போது சுவாரஸ்யமாக உள்ளது. 






இங்கிலாந்து மற்றும் நமீபியா இடையிலான போட்டியின் நிலை இதுதான் 


இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் போட்டி தலா 10 ஓவர்களாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக்  20 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 47* ரன்கள் எடுத்தார். நமீபியா தரப்பில் டிரம்பெல்மேன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


பின்னர், இலக்கை துரத்திய நமீபியா நல்ல தொடக்கத்தைப் பெற்றது, ஆனால் அவர்களின் முடிவு சிறப்பாக அமையாததால், அந்த அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் மைக்கேல் வான் லிங்கன் அதிகபட்சமாக 29 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 33 ரன்கள் எடுத்தார். 


நமீபியாவின் இன்னிங்ஸ்: 


10 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. முதலில் களமிறங்கிய மைக்கேல் வான் லிங்கன் மற்றும் நிக்கோலஸ் டெவின் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்தனர். ஆறாவது ஓவரில் 16 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உதவியுடன் 18 ரன்கள் எடுத்த நிக்கோலஸ் டெவின் அவுட்டாக, பின்னர் 9வது ஓவரின் கடைசி பந்தில் மைக்கேல் வான் லிங்கன் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் அணியின் ஸ்கோர் 82 ரன்களாக இருந்த போது 10வது ஓவரின் நான்காவது பந்தில் டேவிட் விசாவும் அவுட்டானார். இதன் மூலம் 10 ஓவர்களில் நமீபியா அணியால் 84/3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  


இதையடுத்து, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி டக்வொர்த் லூயிஸ் விதியின் கீழ் 41 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி, சூப்பர் 8 சுற்றை தக்கவைத்து கொண்டது.