டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு ஐபிஎல் தொடரே காரணம் என்று ஆஸ்திரேலியா அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் தெரிவித்துள்ளார்.


டி20 உலகக் கோப்பை 2024:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.


மீண்டும் ஃபார்முக்கு வந்த ஸ்டோனிஸ்:


இதில் ஆஸ்திரேலிய அணி தாங்கள் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதன்படி, சூப்பர் 8 சுற்றைப் ஆஸ்திரேலிய அணி இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் விளையாடும். குறிப்பாக  சொல்லவேண்டும் என்றால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் மார்கஸ் ஸ்டோனிஸ் தான்.


இந்த டி20 உலகக் கோப்பையில் 4 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 156 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் பந்து வீச்சை பொறுத்தவரை 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேபோல் 3 வது முறையாக ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார் மார்கஸ் ஸ்டோனிஸ்.


ஐபிஎல் தான் காரணம்:


இந்நிலையில் இது தொடர்பாக அவர் பேசுகையில், “எனது திட்டம் சாதாரணமானது. சூழலுக்கு ஏற்ப கூடுதல் பலத்துடன் சரியான ஷாட்ஸை விளையாட வேண்டும் என்று நினைத்திருந்தேன். கூடுதல் காற்று அடித்ததால், காற்றடிக்கும் திசையில் பந்தை அடிப்பது எளிதாக இருந்தது. நானும் ட்ராவிஸ் ஹெட்டும் சில பவுலர்களை குறி வைத்து அட்டாக் செய்தோம். தொடர்ச்சியாக 3 சிக்சர்களை விளாசியது ஆட்டத்தை மாற்றியதாக நினைக்கிறேன்.


கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விளையாடி வருகிறேன். அதேபோல் 3 முதல் மாதங்களாக ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடியது எனது ஃபார்முக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் என்னால் எளிதாக ரன்களை குவிக்க முடிகிறது” என்று கூறியுள்ளார்.


முன்னதாக கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 39வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ அணிக்காக விளையாடிய மார்கஸ் ஸ்டோனிஸ்அதிரடியாக விளையாடி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வெற்றிபெறச் செய்தார்.


கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 26 பந்துகளில் அரைசதம் விளாசினார் மார்கஸ் ஸ்டோனிஸ். அந்தவகையில் கடைசி வரை களத்தில் நின்ற ஸ்டோனிஸ் 63 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 124 ரன்களை குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: T20 World Cup 2024: டி20 உலகக் கோப்பை: குறுக்கே வந்த மழை.. பாகிஸ்தான் - இலங்கைக்கு எமனாய் மாறிய போட்டிகள்!


 


மேலும் படிக்க: T20 World Cup 2024: அமெரிக்கா முதல் ஆப்கானிஸ்தான் வரை! உலகக் கோப்பையில் எதிர்பாராத சம்பவங்கள்!