டி20 உலகக் கோப்பையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் எத்தனை போட்டிகள் மழையால் நிறுத்தப்பட்டன என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.


டி20 உலகக் கோப்பை 2024:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல் கடைசி அணியாக வங்கதேசம் அல்லது நெதர்லாந்து அணிகளுக்கு சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. 


இந்நிலையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை போட்டிகளில் மழை வந்து ஆட்டம் நடைபெறாமல் போவது வாடிக்கையாகி விட்டது. அந்தவகையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் எத்தனை போட்டிகள் மழையால் நிறுத்தப்பட்டன என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


மழையால் நிறுத்தப்பட்ட போட்டிகள்:


கடந்த ஜூன் 15  ஆம் தேதி இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான 33வது லீக் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் போட்டி நடைபெறுவதாக இருந்த புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் மழை பொழிந்தது. இதனால் போட்டியில் டாஸ் போடாமலே ஆட்டம் ரத்து செய்யப்பட்டு வாஷ் அவுட் முறையில் இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 


வாய்ப்பை பறிகொடுத்த பாகிஸ்தான்:


அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேனா 30வது லீக் போட்டி கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அந்த வகையில் இந்த போட்டியில் அமெரிக்க அணி தோல்வி அடையும் பட்சத்தில் மழை வந்து குறிக்கிடாமல் இருந்தால் பாகிஸ்தான் அணிக்கு சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பு இருப்பதற்கான சூழல் நிலவியது.


ஆனால் நடந்தது என்னவோ அதற்கு எதிராக அமைந்தது. அதாவது அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியின் போது மழை வந்ததால் ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இது பாகிஸ்தான் அணிக்கு பேரிடியாக அமைந்தது.


கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்ற 34வது லீக் போட்டி ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது மழை குறுக்கிட்டது. அதனால் 10 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய நமீபியா அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதானால் DLS (Duckworth Lewis Stern ) முறைப்படி இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 


இலங்கைக்கு இடையூறாக வந்த மழை:


இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையேயான 23வது லீக் போட்டி கடந்த ஜூன் 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியும் இரு அணிகளுக்கும் முக்கியாமன போட்டியாக இருந்தது. அதேநேரம் தொடர் மழையால் போட்டி நிறுத்தப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.


ஒரு வேளை இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தங்களது கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று இருந்தால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு அமைந்திருக்கும். இவ்வாறாக முக்கியமான போட்டிகளில் மழை குறிக்கிட்டதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சூப்பர் 8 சுற்றின் போதாவது மழை குறிக்கிடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகரகள்.