டி20 உலகக் கோப்பை 2024:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் குறித்த ஒரு தொகுப்பை இங்கே பார்ப்போம்:
டி20 உலகக் கோப்பையில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவங்கள்
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பையை பொறுத்தவரை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பலம் வாய்ந்த அணிகள் இந்த முறை மோசமான தோல்விகள் மூலம் வெளியேறிவிட்டன. அதாவது ஐசிசியின் டாப் 10 டி20 அணிகளில் 6 வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து மற்றும் 8 வது இடத்தில் இருக்கும் இலங்கை மற்றும் 7 வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
பாகிஸ்தானை பதறவிட்ட அமெரிக்கா:
பாகிஸ்தான் அணி நடப்பு டி20 உலகக் கோப்பையில் தாங்கள் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றது. 2 போட்டிகளில் தோல்வி அடைந்தது. கனடா அணிக்கு எதிராக கடந்த ஜூன் 11 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஆனால் அதற்கு முன்னதாக கடந்த ஜூன் 6 ஆம் தேதி அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. முதல் முறையாக டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான தகுதியை பெற்ற கத்துக்குட்டி அணியான அமெரிக்க அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த தோல்வி தான் அந்த அணி சூப்பர் 8 சுற்றை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது.
நியூசிலாந்தை அலறவிட்ட ஆப்கானிஸ்தான்:
நியூசிலாந்து அணி இந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் தாங்கள் விளையாடிய மூன்று போட்டியில் இரண்டு போட்டிகளில் அதிர்ச்சியான தோல்வியை கண்டது. அதாவது கடந்த ஜூன் 8 ஆம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது நியூசிலாந்து அணி. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.
ஆனால் பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணியால் 80 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. 15. 2 ஓவர்கள் முடிவதற்குள்ளே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ரன்கள் மட்டுமே எடுத்தது நியூசிலாந்து அணி. நியூசிலாந்து அணியின் இந்த தோல்வி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இலங்கை அணி தாங்கள் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. அதாவது வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. அதேபோல் கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நேபாளம் அணிகள் மோதின. கடைசி வரை சென்ற இந்த போட்டியில் நேபாளம் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தான் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது. இவ்வாறாக இந்த போட்டிகள் எல்லாம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.