உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 12 ஆட்டத்தில், பெர்த் நகரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 1 ரன் வித்தியாசத்தில் "த்ரில்" வெற்றி பெற்றது.
முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, தற்போது 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, சிறப்பான தொடக்கத்தைப் பெற்றாலும், பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் வசீமின் அபார பந்துவீச்சால், ஜிம்பாப்வே அணி தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி, தட்டுத் தடுமாறி, 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது.
ஜிம்பாப்வே அணி சார்பில், சீன் வில்லியம்ஸ் 28 பந்துகளில் 31 ரன்களும் எவன்ஸ் 15 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது வசீம், அபாரமாக பந்துவீசி, 24 ரன்களைக் கொடுத்து, 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதனால் 130 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி, பாகிஸ்தானின் அதிரடி வீரர்களான கேப்டன் பாபர் அசாமும் முகமது ரிஸ்வானும் களமிறங்கினர். எளிதாக பாகிஸ்தான் வெல்லும் என்ற எதிர்பார்த்த நிலையில், பாபர் 4 ரன்களுக்கும் ரிஸ்வான் 14 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து, களமிறங்கிய மிடில் ஆர்டர் வீரர்களான அஹ்மத், கான், அலி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மசூத் மட்டுமே நிலைத்து விளையாடி, 38 பந்துகளில் 44 எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் முகமது நவாஸ் சிறப்பாக விளையாடி, கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், 18 பந்துகளில் 22 ரன்கள் குவித்த அவர் கடைசி பந்துக்கு முன் ஆட்டமிழந்ததால், போட்டி விறுவிறுப்பானது. கடைசி பந்தில், 3 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, பாகிஸ்தானால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி "சூப்பர் த்ரில்" வெற்றிப் பெற்றது.
ஜிம்பாப்வே அணியின் சுழற்பந்துவீச்சாளர் சிக்கந்தர் ராசா, அபாரமாகப் பந்துவீசி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருடன் நெய்ல் எவின்ஸும் 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த முடிவு, உலகக் கோப்பையின் அதிர்ச்சி முடிவுகளில் ஒன்று என்றால் மிகையில்லை எனக் கூறலாம், சூப்பர் 12 பிரிவின் "பி" பிரிவில், விளையாடிய 2 ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்று, 4 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்க அணி 1 வெற்றியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணியோ, 2 தோல்விகளுடன் பூஜ்யம் புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் இந்தத் தோல்வி மிகுந்த அதிர்ச்சி தந்துள்ளதாக போட்டியைக் காண வந்த ரசிகர்கள் தெரிவித்தனர். மீண்டும் ஒரு முறை பாபர் அசாம், ரிஸ்வானும் ஆடவில்லை என்றால் பாகிஸ்தான் அணி பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிறது என்பதை ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தோல்வி எடுத்துக் காட்டுகிறது என்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.