மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் டி.சிவக்குமார். சிறுவயதிலேயே போலியோ அட்டாக் மூலம் பாதிக்கப்பட்டவர். ஆனாலும் மனம் தளராமல் கிரிக்கெட் விளையாட்டு மீது ஆர்வம் காட்டி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி இருப்பது தெரியவரவே அதில் இணைந்து விளையாடி வருகிறார். கடந்த 14 வருடங்களாக தமிழக அணி சார்பாக மாற்றுத்திறனாளிகள் ஸ்டேண்டிங் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். 2019-ல் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாகவும் இருந்துள்ளார். அதே போல் விரைவான அரைசதம் அடித்தல், அதிக ரன் குவித்தல் உள்ளிட்ட பல்வேறு பட்டியலிலும் சாதனை படைத்துள்ளார். இதனால் சிவக்குமாரை மதுரை மக்கள் சச்சின் சிவா என்று பெருமையுடன் அழைத்து வருகின்றனர். இந்நிலையில் சச்சின் சிவா என்ற சிவக்குமார் இந்திய மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் சச்சின் சிவாவை வாழ்த்தி வருகின்றனர்.



 

மதுரை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்  சச்சின் சிவாவிடம் பேசினோம், "கடந்த 14 வருடங்களாக தமிழ்நாட்டு அணிக்கும், கடந்த நான்கு வருடமா இந்திய அணிக்காவும் கிரிக்கெட் விளையாடி வருகிறேன்.  எனக்கு இடது காலில் சற்று பாதிப்பு இருக்கும். 40% பாதிப்பை கொண்டு விளையாடி வருகிறேன்.  ஐ.பி.எல் போல விளையாடப்படும் (டி.பி.எல்) திவாங் பிரிமியர் லீக் துபாயில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் தமிழக அணி சாம்பியன் சிப்பை தட்டியது. இதற்கு கேப்டனாக பணி செய்தேன். இதற்கு கமலஹாசன் உட்பட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தது மன நிறைவை தந்தது.  அதே போல் இரண்டு நேஷ்னல் ரெக்கார்ட் செய்துள்ளேன். கடந்த 2018-ல் ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற  கிரிக்கெட் போட்டியில் 64 பந்துகளுக்கு 115 ரன் குவித்து நாட் அவுட் பேட்ஸ்மேனா நின்றது இந்திய அளவில் பாராட்டு கிடைத்தது.

 


 


அதே போல் 2019-ல் அசாமில் நடைபெற்ற போட்டியில் 16 பந்துகளுக்கு 50 ரன்கள் குவித்தேன். இதனால் (fastest fifty)- பாஸ்ட்டஸ் ஃபிப்ட்டி என்ற இலக்கை அடைந்தேன். பயிற்சியாளர் இல்லாமல் தன்னிச்சையாக பயிற்சி பெற்று வளர்ந்துள்ளேன். அப்போதெல்லாம் சச்சின் டெண்டுல்கர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவருடை வீடியோக்கள்தான் பயிற்சியை அளித்தது. அதன் பின்னர் என்னை பலரும் சச்சின் சிவா என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.  தமிழ்நாடு அளவில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியின் கேப்டனாக இருந்தேன்.

 


 

இந்நிலையில் இந்திய கேப்டனாக என்னை நியமித்துள்ளனர். இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை உணர்ந்து சிறப்பாக விளையாடுவேன். மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைத்தால் இந்திய அணிக்கு பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு கோப்பைகளை தட்டிவர முடியும்” என சச்சின் சிவா நம்பிக்கை தெரிவிக்கிறார்.